முல்லை பெரியாற்றில் புதிய அணை – கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?


முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது. கேரள சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன. 25) தொடங்கி வரும் ஜனவரி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அதன்படி கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் மாநில கொள்கை அறிக்கையை சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வாசித்தார். அந்த அறிக்கையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018 முதல் 2021 ஆண்டு வரையில் பருவமழை காலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கையும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு ஆற்றங்கரையோரம் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கருதியும், தமிழ்நாட்டின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய அணையின் கட்டுமானம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தற்கால கட்டுமானங்களின் நுட்பங்களை கொண்டும் கட்டமைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பான அனைத்து இடங்களிலும் கேரள அரசு இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தமிழகத்துடன் இணக்கமான தீர்வுக்கு சாத்தியமான பின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு நிர்வகித்து வரும் நிலையில், அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருகிறது.

முன்னதாக சட்டமன்றத்தில் உரையை வசித்த ஆளுநர் முகமது ஆரிப் கான் அறிக்கையில் உள்ள முதல் பத்தி அனைத்தையும் தவிர்த்து விட்டு கடைசியாக உள்ளவற்றை மற்றும் வாசித்தார். இந்த சம்பவம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவையில் சிறிது நேரத்திற்கு சலசலப்பு நிலவியது.
Share on:

பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டிய கும்பல் யார்? கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?


திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளராக உள்ள நேசபிரவு என்பவரை மர்ம நபர்கள் நேற்று நோட்டம் விட்டு கொடூரமாக வெட்டியுள்ளனர். அவர் கடைசியாக போலீசிடம் போனில் உதவி கேட்டபடி பேசிக்கொண்டிருக்கும் போதே வெட்டப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு, இவர் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நேசபிரபு நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் இவரை தொடர்ந்து வேவு பார்த்தபடி சென்றுள்ளனர். நேசபிரபு யார், எந்த ஊர் என்று கேட்டு அவரது தந்தையிடமே தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

இதனிடையே தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் கொடுத்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போலீசிடம் நேசபிரபு கூறியுள்ளார். அப்போது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நேரில வந்து புகார் அளிக்குமாறு கூறினார்களாம்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டிருக்கிறார். அப்போது காமநாயக்கன்பாளையம் தலைமை காவலர் கண்ணன் என்பருடன் நேசபிரபு பேசுகையில், “வந்துட்டே இருக்கானுங்க சார்… எவ்ளோ தடவைதான் பாக்றது? பல்லடம் போலீஸ்கிட்டே சொல்லி பிடிக்க சொல்லுங்க சார். எல்லா கேமராலயும் அவங்க முகம் பதிஞ்சிருக்கும். இந்த பெட்ரோல் பங்க் கேமரால கூட இருக்கும். எதுவேணா நடக்கலாம் சார்..எல்லாருக்குமே வயசு 26க்குள்ள தான் இருக்கும். எல்லாமே தமிழ்காரங்கதான்.. இந்திக்காரங்க இல்லை.. என் அப்பாவிடமே அட்ரஸ் கேட்டு போய்ருக்காங்க. ஆறு பேர் இருப்பாங்க..

ஒரு டைம் இல்லை ரெண்டு இல்லை சார்.. இது நாலு தடவை.. இரண்டு பைக்கில் ஹெல்மெட் போட்டு வந்தாங்க… என்றார். அப்போது போலீசார் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், இன்ஸ்பெக்டருக்கு அழைக்குமாறும் கூறியுள்ளனர். அப்போது திடீரென அங்கு அந்த கும்பல் வந்ததை பார்த்த நேசபிரபு போலீசிடம், “வந்துட்டாங்க சார்.. வாழ்க்கையே முடிஞ்சது” என காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு காவல்துறை வேகமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தாக்குதல் நிகழும் சற்று முன் கூட போலீசிடம் செய்தியாளர் பாதுகாப்பு கோரும் செல்போன் ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே செய்தியாளரை தாக்கிய மர்ம கும்பல் யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Share on:

சரணடையும் நாளிலேயே ஜாமீன் கேட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!


பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே அவர்களின் ஜாமீன் மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த 18 வயது பணிப்பெண்னை துன்புறுத்தியதாக, ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே, தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களது மனுவில், இளம்பெண் அளித்த புகாரில் கூறியுள்ளபடி எந்த தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், சொந்த மகளை போல பார்த்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். டிசம்பர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளை தங்கள் வீட்டில் கொண்டாடியதாகவும், அப்போது எடுத்த புகைப்படங்களிலிருந்தே எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என தெரியவரும் எனவும், ஆனால் அடுத்த 15 நாட்களில் எப்படி புகார் அளிக்கும் அளவிற்கு மாறினார் என புரிந்துகொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

காதலில் ஈடுபாடு கொண்டது தெரிந்தவுடன், அதை ஆட்சேபித்ததாகவும், எதிர்காலம் வீணாகிவிடும் என அறிவுறுத்தியும் பணிப்பெண் கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரும் சரணடையும் நாளிலேயே அவர்களது ஜாமீன் மனுவை பரிசீலித்து, இரு தரப்பிற்கும் வாய்ப்பளித்து, சட்டத்திற்குட்பட்டு முடிவெடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
Share on:

வேங்கைவயல் சம்பவத்தில் ‘ட்விஸ்ட்’.. ஒருவரின் DNA கூட ஒத்துப்போகவில்லை.. ஷாக் ஆன சிபிசிஐடி!


வேங்கை வயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன், 31 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டதில் ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகாதது தெரியவந்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்தனர். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் நடைபெற்ற இந்த கொடூரமான அருவெறுக்கதக்க செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த குற்றவாளிகள் யார் என புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணையினை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.

சிபிசிஐடி போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கிடமானவர்களாக கருதப்பட்ட 31 பேரிடம் மட்டும் டிஎன்ஏ (DNA) பரிசோதனை மேற்கொண்டனர். மனித கழிவு கலந்த குடிநீர் மாதிரிகளுடன் , 31 பேரின் டிஎன்ஏவை சென்னை மைலாப்பூர் தடவியல் ஆய்வக நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

இந்த ஆய்வு முடிவின்படி, டிஎன்ஏ மாதிரிகள், மனித கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்துள்ளது. இதனை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்தகட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

தமிழக கோவில்களில் பூஜைகளை நிறுத்தியதாக வதந்தி பரப்பாதீர்கள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!


ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் எங்கும் பூஜைகள் நிறுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது, இது சம்மந்தமாய் வதந்திகளை பரப்பக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் தகவல் தெரிவித்த பின் நேரலை செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றன் கூறியுள்ளது.

அயோத்தியில், ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அயோத்தி செல்ல இயலாத பக்தர்களுக்காக பஜனை, அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில் அனுமதி பெறவில்லை எனக் கூறி, நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

வழக்கு பின்னணி; உடனடியாக அனுமதி கோரி விண்ணப்பித்த போது, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என்றும், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனவும் கூறி அனுமதி மறுத்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்த மதத்தை பற்றியும் விவாதிக்கவில்லை என்றும், மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடுக்க முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை விசாரித்தார்.

அப்போது மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி,* தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீசார் அனுமதி தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் பின்னர் உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டுமென்றும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் எங்கும் பூஜைகள் நிறுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது, இது சம்மந்தமாய் வதந்திகளை பரப்பக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்ற வழக்கில், ஒரு மாநிலத்தில், நாட்டில் பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல சமூகங்கள் வசிக்கின்றன என்பதை காரணம் காட்டி பூஜைகளை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதில் முறையாக விளக்கம் அளிக்கப்படும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு கோவிலில் சிறப்பு பூஜை நடத்த தடை விதித்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Share on:

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்.. 600 பக்க சார்ஜ்ஷீட் தாக்கல் செய்தது NIA


ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 600 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாயவு முகமை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆளுநரை தாக்க முயற்சித்தல் பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளியே நின்றிருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன.

மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கருக்கா வினோத்தை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்…
Share on:

Continue Reading

ரத்தம் சொட்ட சொட்ட அடி.. மிளகாயை கரைத்து மேலே ஊற்றினார்கள்.. எம்எல்ஏ மருமகள் மீது இளம்பெண் புகார்!


என் உடம்பில் கத்தியால் கீறி ரத்தம் சொட்ட சொட்ட அடித்தார்கள் என்று கருணாநிதி எம்எல்ஏவின் மருமகள் மீது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மிளகாய் பொடியை கரைத்து ஊற்றி சித்ரவதை செய்தார்கள் என்றும் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட இளம்பெண்.

வீட்டு வேலைக்காக வந்த பெண்ணை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகனும், மருமகளும். புகார் அளித்த பெண்ணின் பெயர் ரேகா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநருங்குன்றம் காலனி பகுதியை சேர்ந்த வீரமணி- செல்வி தம்பதியின் மகளாவார்.

12ம் வகுப்பு வரை படித்துள்ள ரேகா குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் உறவினர் வழியாக சித்ரா என்ற புரோக்கர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் படிப்படியாக வேலைகளை கற்றுக்கொண்டு செய்து வந்துள்ளார். காய் நறுக்க சொன்னதோடு உணவு சமைக்க சொல்லியிருக்கிறார்கள். துணி துவைத்து காயப்போடுவது, வீடு துடைப்பது என எல்லா வேலைகளையும் செய்யச்சொல்வார்களாம். செய்த வேலையில் குற்றம் குறை கண்டுபிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

பொங்கல் விழாவிற்காக போகிபண்டிகை அன்று இரவு எம்எல்ஏ குடும்பத்தினர் தங்களது காரில் ரேகாவை அழைத்துச் வந்து ரோகாவின் சொந்த ஊரான திருநரங்குன்றத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இரண்டு நாள் கழித்து காணும் பொங்கல் அன்று ரேகா தன் தாயிடம் கடந்த சில மாதங்களாக எம்எல்ஏ மகன் ஆண்ரோ மதிவாணன் மருமகள் மெர்லினா ஆகியோர் என்னை அடித்து உதைத்து உடம்பில் சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அம்மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி இந்த பிரச்சினை திருவான்மியூர் பகுதியில் நடைபெற்றதால் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதால் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா மீது நீலாங்கரை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரேகாவிற்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து உடனடியாக மதுரைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரேகா, தனக்கு நேரிட்ட கொடுமைகளை விவரித்துள்ளார்.

வீட்டு வேலைகளை நான் கற்றுக்கொண்டு செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து அடிப்பார்கள் என்று கூறினார். நாம் எம்எல்ஏவின் மருமகள் என்று சொல்லி சொல்லியே அடிப்பார்கள். என் அம்மா மீது போலீசில் புகார் கொடுத்து விடுவதாக மிரட்டுவார்கள். சாம்பார் கரண்டி, தோசைக்கரண்டி, கத்தியால் தாக்குவார்கள். அடியால் வலி தாங்க முடியாது அழுவேன். அப்படியும் விடாமல் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பார்கள். போய் கழுவி விட்டு வா என்று சொல்லி அடிப்பார்கள்.

ரத்த காயத்தில் நான் துடித்த போது மிளகாய் பொடியை கரைத்து மேலே ஊற்றுவார்கள். எனக்கு நிறைய தலைமுடி இருக்கும் அதனை எல்லாம் வெட்டி விட்டார்கள் அப்போது கூட நான் எம்எல்ஏவின் மருமகள் என்று சொல்லிதான் அடித்து சித்ரவதை செய்தார்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட ரேகா.வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது மட்டும் போதாது அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் எவிடென்ஸ் கதிர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் எவிடென்ஸ் கதிர்.
Share on:

ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் கும்பாபிஷேகம் -கே.சி. பழனிசாமி


உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா? என்று முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை மீட்க வேண்டும். ஒவ்வொரு கோவிலையும் அந்தந்த பகுதியில் உள்ள மக்களை வைத்து குழு அமைத்து நிர்வகித்து கொள்ளலாம் அல்லது மத அமைப்புகள் மூலம் நிர்வகித்து கொள்ளலாம் என்று அண்ணாமலை போராடுகிறார்.

ஆனால் மத்தியில் ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா?

அண்ணாமலை தெரியாமல் பேசுகிறாரா? அல்லது பிரதமர் மோடி அண்ணாமலை கருத்திற்கு எதிராக செயல்படுகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும்.. வெள்ள நிவாரணம் ரூ.6000.. உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!


ரேஷன் கடைகளில் வெள்ள நிவாரணம் ரூ.6000 வழங்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ₹8,000 கோடி நிவாரணம் வழங்கவும், அதில் ₹3,000 கோடியை இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள்; இது நிர்வாகம் சம்மந்தப்பட்டது, அதை தமிழ்நாடு அரசே பார்த்துக் கொள்ளும், நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வழங்கி வரும் ரூ. 6000 வெள்ள நிவாரண தொகையை வழங்கி வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ,18, 17 , ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடந்த 21.12.2023-ஆம் தேதி அன்று தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழகுவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் . அதிகாரிகளிடம் ஸ்டாலின் நிவாரண தொகை குறித்து பேசினார். அதில், டோக்கன் சரியாக வழங்கப்படுகிறதா? ரேஷன் கடைகளில் அதிக கூட்டம் வரிசை இருக்கிறதா? என்று ஆலோசனை செய்தார். முக்கியமாக சில இடங்களில் டோக்கன் பிளாக்கில் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது.

அதாவது சில இடங்களில் ரேஷன் ஊழியர்கள், கவுன்சிலர்கள் வழியாக டோக்கன்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுவரை பட்டுவாடா செய்யப்பட்ட பணம்.. பயன்பெற்ற நபர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் ரூ. 6000 வழங்கியதில் மோசடி ஏதாவது நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க மெசேஜ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.. வெள்ள நிவாரண தொகை : ரூ.6 ஆயிரம் பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகை ரூ. 6,000 பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க ஒரு மொபைல் எண்ணும் வழங்கப்படுகிறது.
Share on:

கலப்பு திருமணத்தால் பறிபோன இளம்பெண் உயிர்.. ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம் வேண்டும்! வலுக்கும் குரல்!


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை செய்ப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெருமாள்,ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (19). அருகில் உள்ள பூவாளூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19), என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

இருவரும் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காதலித்து டிசம்பர் 31ல் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு பல்லடத்தில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த பல்லடம் காவல்துறை 18 வயது பூர்த்தி அடைந்துள்ள ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாகவும்,சட்ட விரோதமாகவும் ஜனவரி 2ம் தேதி வலுக்கட்டாயமாகப் தம்பதிகளைப் பிரித்து பெற்றோருடன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அடுத்த நாள் (03.01.2024) அதிகாலையில் அவசர அவசரமாக அவரது உடலை எரித்துள்ளனர். நவீன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெருமாள் மற்றும் ரோஜா கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நவீன் கூறுகையில்,

“நானும் ஐஸ்வரியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்த காதலுக்கு ஐஸ்வரியா வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் நான் பட்டியல் சமூகம், ஐஸ்வரியா மாற்று சமூகம் என்பதுதான். ஆனால் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். சமீபத்தில்தான் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டோம். இந்த விஷயம் எப்படியோ, ஐஸ்வரியாவின் வீட்டிற்கு கசிந்துவிட்டது.

எனவே வேறு வீடு மாறிவிட்டோம். இருப்பினும் அந்த வீட்டை கண்டுபிடித்து வந்த பல்லடம் போலீசார் ஐஸ்வரியாவை மட்டும் அழைத்து சென்றனர். என் மீது ஐஸ்வரியாவின் பெற்றோர் கடும் கோபத்துடன் இருப்பதாகவும், எனவே என்னை போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டாம் என்று அவர்கள் கூறினர். இருப்பினும் நான் பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றேன். அங்கு, ஐஸ்வரியாவை அவரது தந்தை அவர அழைத்து சென்றுவிட்டார். பின்னர் நானும் வீடு திரும்பிவிட்டேன். ஆனால், அடுத்த நாள் காலை அவள் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு அரசுக்கு ‘ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் ‘ என கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சாதிய பாகுபாடு காரணமாகவே கொலை நடைபெற்றுள்ளதாலும்,இதனால் இணையரை இழந்தவர் பட்டியலினத்தவர் என்பதாலும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.

பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அதுவரை சாதி மறுப்புத் திருமண தம்பதிகளைப் பாதுகாப்புக்கு வழங்கிய வழிகாட்டுதல்களில் ஒன்றான ‘சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் எந்த காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறார்களோ,அந்தக் காவல்நிலையமே தம்பதிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு’ என்பது பல்லடம் காவல்நிலைய ஆய்வாளரால் மீறப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.அதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே இதே கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: