பா.ஜ.க. சொல்வதை தேர்தல் ஆணையம் செய்கிறது! -குற்றம்சாட்டும் முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி.!

அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அதே நேரத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.ஸுக்கு புதுக்குடைச்சல் தர தயாராகிறார் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி.

எம்.ஜி.ஆர்., ஜெ. உள்ளிட்டோர் வகித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியையே ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு அதிகாரமிக்க பதவிகளை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். சட்டத் திருத்தம் செய்தனர். இதனை நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு தற்போது அங்கீகரித்துள்ளது ஆணையம்.

இதனை எதிர்க்கும் கே.சி.பழனிச்சாமி நம்மிடம், “”அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்.! அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் சட்ட விதிகளின்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கட்சியின் தலைமையை யாரும் பின்வாசல் வழியாக ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காகவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கினர்.

பொதுவாக, சொத்துகளுக்காக உயில் எழுதுவார்கள். சொத்துக்கு சொந்தக்காரர் மறைந்து விட்டால், உயிலின்படி பாத்தியப்பட்டவர்கள் சொத்துக்களை அனுபவித்துக்கொள்ளலாம். ஆனா, உயிலையே மாத்தி அமைத்திட முடியாது. ஒருவேளை, பாத்தியப்பட்டவர்களுக்குள் பிரச்சனை எனில் உயிலை மாற்றலாம் என வைத்துக்கொண்டாலும், உயிலின்படி பாத்தியப்பட்டவர்கள் எல்லோரும் உட்கார்ந்து பேசித்தான் தீர்க்க முடியும். அந்த வகையில், அ.தி.மு.க.வுக்கு பாத்தியப்பட்டவர்கள் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஒன்றரை கோடி தொண்டர்கள்தான். அவர்களின் கருத்துகளை பெறாமலே, ஒரு பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் சட்டவிதிகளை மாற்றியமைக்கிறோம் என அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது மிகப்பெரிய தவறு.

எம்.ஜி.ஆர். நிறுவிய அ.தி.மு.க.வின் சட்டவிதிகளை ஏற்கெனவே இதே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதன்படி, அ.தி.மு.க.வில் எந்த ஒரு சட்ட விதியையும் மாறுதல் செய்யும் அதிகாரம், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அத்தனை பேரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் பொதுச்செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. அப்படியிருக்க, கட்சியின் விதிகளின்படி நடைபெறாத ஒரு பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆரம்பக் கட்டத்திலேயே ஆணையம் நிராகரித்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது அங்கீகரித்திருப்பதில் ஆணையத்தின் மீதான நேர்மையில் பல சந்தேகங்கள் வலுக்கின்றன.

ஒன்றரைக் கோடி தொண்டர்களின் கருத்துகளை அறிவதில் சிக்கல் இருக்கிறது என ஆணையம் நினைத்தால், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். வைத்துள்ள கோரிக்கையில் ஆட்சேபணை இருப்பவர்கள் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தால், அதன்படி வரும் கருத்துகளை, ஆய்வுக்கு உட்படுத்தி, அதிலிருந்து தீர்ப்பளித்திருந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். தன் போக்குக்கு தனது இணைய தளத்தில், அங்கீகரிக்கிறோம் என பதிவு செய்ததன் மூலம், அ.தி.மு.க.வின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது ஆணையம்.

மேலும், சசிகலாவை பொதுச்செயலாளராக பொதுக்குழு தேர்ந்தெடுத்ததை எதிர்த்து 2017, ஜனவரி 6-ந்தேதி ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தேன். இதனை ஏற்றுக்கொண்டு, சசிகலாவின் அங்கீகாரத்தை நிறுத்தியதுடன், எனது மனு தொடர்பாக சசிகலாவிடம் விளக்கம் கேட்டது ஆணையம். சசிகலாவின் விளக்கம் தவறானது என்பதையும், அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே விதிகளுக்குப் பொருந்தாது என்பதையும் விரிவான விளக்கத்தை நானும் ஆணையத்திடம் கொடுத்துள்ளேன்.

பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்து நான் செய்த மனு நிலுவையில் இருக்கும்போது, பொதுச்செயலாளர் பதவியே தேவையில்லை என எடப்பாடியும் பன்னீரும் எடுத்த முடிவை எப்படி அங்கீகரிக்க முடியும்? இதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடும் உரிமை பறிபோகிறது. அதனால், ஆணையத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறேன்.

ஆணையத்தின் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பின்னணியிலேயே நடக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களைப் பிளவுபடுத்தி, இரட்டை இலையை மீண்டும் முடக்கலாம் ‘’ என்கிறார் அழுத்தமாக.

Share on: