ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்.. 600 பக்க சார்ஜ்ஷீட் தாக்கல் செய்தது NIA


ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 600 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாயவு முகமை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆளுநரை தாக்க முயற்சித்தல் பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளியே நின்றிருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன.

மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கருக்கா வினோத்தை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்…
Share on:

Continue Reading

ரத்தம் சொட்ட சொட்ட அடி.. மிளகாயை கரைத்து மேலே ஊற்றினார்கள்.. எம்எல்ஏ மருமகள் மீது இளம்பெண் புகார்!


என் உடம்பில் கத்தியால் கீறி ரத்தம் சொட்ட சொட்ட அடித்தார்கள் என்று கருணாநிதி எம்எல்ஏவின் மருமகள் மீது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மிளகாய் பொடியை கரைத்து ஊற்றி சித்ரவதை செய்தார்கள் என்றும் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட இளம்பெண்.

வீட்டு வேலைக்காக வந்த பெண்ணை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகனும், மருமகளும். புகார் அளித்த பெண்ணின் பெயர் ரேகா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநருங்குன்றம் காலனி பகுதியை சேர்ந்த வீரமணி- செல்வி தம்பதியின் மகளாவார்.

12ம் வகுப்பு வரை படித்துள்ள ரேகா குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் உறவினர் வழியாக சித்ரா என்ற புரோக்கர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் படிப்படியாக வேலைகளை கற்றுக்கொண்டு செய்து வந்துள்ளார். காய் நறுக்க சொன்னதோடு உணவு சமைக்க சொல்லியிருக்கிறார்கள். துணி துவைத்து காயப்போடுவது, வீடு துடைப்பது என எல்லா வேலைகளையும் செய்யச்சொல்வார்களாம். செய்த வேலையில் குற்றம் குறை கண்டுபிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

பொங்கல் விழாவிற்காக போகிபண்டிகை அன்று இரவு எம்எல்ஏ குடும்பத்தினர் தங்களது காரில் ரேகாவை அழைத்துச் வந்து ரோகாவின் சொந்த ஊரான திருநரங்குன்றத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இரண்டு நாள் கழித்து காணும் பொங்கல் அன்று ரேகா தன் தாயிடம் கடந்த சில மாதங்களாக எம்எல்ஏ மகன் ஆண்ரோ மதிவாணன் மருமகள் மெர்லினா ஆகியோர் என்னை அடித்து உதைத்து உடம்பில் சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அம்மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி இந்த பிரச்சினை திருவான்மியூர் பகுதியில் நடைபெற்றதால் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதால் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா மீது நீலாங்கரை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரேகாவிற்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து உடனடியாக மதுரைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரேகா, தனக்கு நேரிட்ட கொடுமைகளை விவரித்துள்ளார்.

வீட்டு வேலைகளை நான் கற்றுக்கொண்டு செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து அடிப்பார்கள் என்று கூறினார். நாம் எம்எல்ஏவின் மருமகள் என்று சொல்லி சொல்லியே அடிப்பார்கள். என் அம்மா மீது போலீசில் புகார் கொடுத்து விடுவதாக மிரட்டுவார்கள். சாம்பார் கரண்டி, தோசைக்கரண்டி, கத்தியால் தாக்குவார்கள். அடியால் வலி தாங்க முடியாது அழுவேன். அப்படியும் விடாமல் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பார்கள். போய் கழுவி விட்டு வா என்று சொல்லி அடிப்பார்கள்.

ரத்த காயத்தில் நான் துடித்த போது மிளகாய் பொடியை கரைத்து மேலே ஊற்றுவார்கள். எனக்கு நிறைய தலைமுடி இருக்கும் அதனை எல்லாம் வெட்டி விட்டார்கள் அப்போது கூட நான் எம்எல்ஏவின் மருமகள் என்று சொல்லிதான் அடித்து சித்ரவதை செய்தார்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட ரேகா.வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது மட்டும் போதாது அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் எவிடென்ஸ் கதிர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் எவிடென்ஸ் கதிர்.
Share on:

ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் கும்பாபிஷேகம் -கே.சி. பழனிசாமி


உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா? என்று முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை மீட்க வேண்டும். ஒவ்வொரு கோவிலையும் அந்தந்த பகுதியில் உள்ள மக்களை வைத்து குழு அமைத்து நிர்வகித்து கொள்ளலாம் அல்லது மத அமைப்புகள் மூலம் நிர்வகித்து கொள்ளலாம் என்று அண்ணாமலை போராடுகிறார்.

ஆனால் மத்தியில் ராமர் கோவிலை சங்கராச்சாரியர்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் மோடி கும்பாபிஷேகம் செய்கிறார் இது தான் உங்கள் சித்தாந்தமா?

அண்ணாமலை தெரியாமல் பேசுகிறாரா? அல்லது பிரதமர் மோடி அண்ணாமலை கருத்திற்கு எதிராக செயல்படுகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும்.. வெள்ள நிவாரணம் ரூ.6000.. உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!


ரேஷன் கடைகளில் வெள்ள நிவாரணம் ரூ.6000 வழங்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ₹8,000 கோடி நிவாரணம் வழங்கவும், அதில் ₹3,000 கோடியை இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள்; இது நிர்வாகம் சம்மந்தப்பட்டது, அதை தமிழ்நாடு அரசே பார்த்துக் கொள்ளும், நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வழங்கி வரும் ரூ. 6000 வெள்ள நிவாரண தொகையை வழங்கி வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ,18, 17 , ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடந்த 21.12.2023-ஆம் தேதி அன்று தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழகுவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் . அதிகாரிகளிடம் ஸ்டாலின் நிவாரண தொகை குறித்து பேசினார். அதில், டோக்கன் சரியாக வழங்கப்படுகிறதா? ரேஷன் கடைகளில் அதிக கூட்டம் வரிசை இருக்கிறதா? என்று ஆலோசனை செய்தார். முக்கியமாக சில இடங்களில் டோக்கன் பிளாக்கில் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது.

அதாவது சில இடங்களில் ரேஷன் ஊழியர்கள், கவுன்சிலர்கள் வழியாக டோக்கன்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுவரை பட்டுவாடா செய்யப்பட்ட பணம்.. பயன்பெற்ற நபர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் ரூ. 6000 வழங்கியதில் மோசடி ஏதாவது நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க மெசேஜ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.. வெள்ள நிவாரண தொகை : ரூ.6 ஆயிரம் பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகை ரூ. 6,000 பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க ஒரு மொபைல் எண்ணும் வழங்கப்படுகிறது.
Share on:

கலப்பு திருமணத்தால் பறிபோன இளம்பெண் உயிர்.. ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம் வேண்டும்! வலுக்கும் குரல்!


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை செய்ப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெருமாள்,ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (19). அருகில் உள்ள பூவாளூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19), என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

இருவரும் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காதலித்து டிசம்பர் 31ல் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு பல்லடத்தில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த பல்லடம் காவல்துறை 18 வயது பூர்த்தி அடைந்துள்ள ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாகவும்,சட்ட விரோதமாகவும் ஜனவரி 2ம் தேதி வலுக்கட்டாயமாகப் தம்பதிகளைப் பிரித்து பெற்றோருடன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அடுத்த நாள் (03.01.2024) அதிகாலையில் அவசர அவசரமாக அவரது உடலை எரித்துள்ளனர். நவீன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெருமாள் மற்றும் ரோஜா கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நவீன் கூறுகையில்,

“நானும் ஐஸ்வரியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்த காதலுக்கு ஐஸ்வரியா வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் நான் பட்டியல் சமூகம், ஐஸ்வரியா மாற்று சமூகம் என்பதுதான். ஆனால் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். சமீபத்தில்தான் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டோம். இந்த விஷயம் எப்படியோ, ஐஸ்வரியாவின் வீட்டிற்கு கசிந்துவிட்டது.

எனவே வேறு வீடு மாறிவிட்டோம். இருப்பினும் அந்த வீட்டை கண்டுபிடித்து வந்த பல்லடம் போலீசார் ஐஸ்வரியாவை மட்டும் அழைத்து சென்றனர். என் மீது ஐஸ்வரியாவின் பெற்றோர் கடும் கோபத்துடன் இருப்பதாகவும், எனவே என்னை போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டாம் என்று அவர்கள் கூறினர். இருப்பினும் நான் பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றேன். அங்கு, ஐஸ்வரியாவை அவரது தந்தை அவர அழைத்து சென்றுவிட்டார். பின்னர் நானும் வீடு திரும்பிவிட்டேன். ஆனால், அடுத்த நாள் காலை அவள் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு அரசுக்கு ‘ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் ‘ என கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சாதிய பாகுபாடு காரணமாகவே கொலை நடைபெற்றுள்ளதாலும்,இதனால் இணையரை இழந்தவர் பட்டியலினத்தவர் என்பதாலும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.

பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அதுவரை சாதி மறுப்புத் திருமண தம்பதிகளைப் பாதுகாப்புக்கு வழங்கிய வழிகாட்டுதல்களில் ஒன்றான ‘சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் எந்த காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறார்களோ,அந்தக் காவல்நிலையமே தம்பதிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு’ என்பது பல்லடம் காவல்நிலைய ஆய்வாளரால் மீறப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.அதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே இதே கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

பஸ் ஸ்டிரைக் 19ம் தேதி வரை ஒத்திவைப்பு.. கைவிட்ட தொழிற்சங்கங்கள்.. கோர்ட்டில் என்ன நடந்தது?


அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது 8 ஆண்டு கால கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், போராட்டத்தை 19ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, நேற்று முதல் (ஜனவரி 9) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஜெ.ரவீந்திரன் பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது நிலையில் தற்போது சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அப்போது தொழில் சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டபடி முன்னரே நோட்டீஸ் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், போராட்டம் நடத்த உரிமை இல்லை என நாங்கள் கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் நாங்கள் கூறுகிறோம். பண்டிகை நேரத்தில் இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அவசியமா? என கேள்வி எழுப்பினார். இந்த போராட்டம் மூலம் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என கேட்டனர்.

பின்னர் ஓய்வூதியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பிற்பகலில் 2.15 க்கு பதில் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர்.

உணவு இடைவேளைக்கு பின்னர் நீதிமன்றம் கூடிய நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “அரசு, தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. எனவே போராட்டத்தை கைவிட்டு ஜனவரி 19ம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் 7000 தொழிலாளர்களா? பொதுமக்களா? என்ற நிலை உள்ளது. அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இன்று அதிகாரிகளை வேலைக்கு செல்ல அனுமதிக்காமல் மிரட்டல் விடுப்பதால் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அண்ணா தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “கடந்த டிசம்பர் 19ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான நோட்டீஸ் அளிக்கப்படும் அரசு கண்டுகொள்ளாமல், புறக்கணித்துள்ளது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2014ம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும், ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை” என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, “தமிழகத்தின் முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை வருவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஜனவரி 19ம் தேதி வரை ஏன் நிறுத்தி வைக்க கூடாது?” என தொழிற்சங்கங்களுக்கும்? “92 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்காலிகமாக ரூ.2,000 ஏன் வழங்கக் கூடாது?” என்று அரசுக்கும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அரசும், தொழிற்சங்கங்களும் இதற்கு பதிலளிக்க முன்வரவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதாக நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து தொழிற்சங்கங்கள் தரப்பு வழக்கறிஞர்கள், ஜனவரி 19ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைக்க ஒப்புதல் தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து நாளை பணிக்கு திரும்ப தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பணிக்கு திரும்பும் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Share on:

பாதி வழியிலேயே நிற்கும் அரசு பஸ்கள்! அனுபவமில்லாத டிரைவர்களால் பயணிகள் அவதி! விபத்துக்கள் அதிகரிப்பு?


போக்குவரத்து தொழிலாளர்கள் 8 ஆண்டுக்கால கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இப்படி இயக்கப்படும் பேருந்துகள் விபத்தில் சிக்குவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

தேசிய அளவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்து கழகங்கள் மிக சிறப்பான் பங்களிப்பை செய்து வருகின்றன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டுவது கிடையாது.

தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. அவசரத் தேவைக்காக போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அரசு வழங்கும் பணத்திற்குகூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.

கடந்த 2017ஆம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. இதே 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20.000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஓட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், சில இடங்களில் அனுபவம் இல்லாதவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆங்காங்கே பாதி வழியில் பேருந்துகள் நின்றுவிடுகின்றன. சேலத்தில் ஐந்து ரோடு பகுதியில் அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றிருக்கிறது. கடைசியில் பயணிகள் அனைவரும் சேர்ந்து அரசு பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தியிருக்கின்றனர்.

திண்டிவனத்தில் மழை வெள்ளமாக ஓடும் பாலத்தை கடக்க முயன்றபோது அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றிருக்கிறது. பேருந்தில் இருந்த பயணிகள் வெள்ளத்தில் இறங்கி நடந்தே சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில், பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்த கடை மீது பேருந்து லேசாக மோதியுள்ளது. இதில் கடையின் கண்ணாடி கதவுகள் உடைந்திருக்கின்றன. சில இடங்களில் பேருந்துகள் சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கியிருக்கின்றன.

எனவே தொடர் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும், தற்காலி மற்றும் அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
Share on:

ரயில்வே மருத்துவமனைகளில் உதவியாளர்கள் நியமனம்.. சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு


ரயில்வே மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உதவியாளர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரி தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19ம் தேதி உத்தரவிட்டது.

இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ப்ய்திய ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023ம் ஆண்டு மார்ச் மாதமே துவங்கி விட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக சுட்டிக்காட்டினர். புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது என உத்தரவிட்டனர். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

திருவண்ணாமலை விவசாயி மீதான குண்டர் சட்டம் ரத்து.


திருவண்ணாமலையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து போராடிய விவசாயி அருள், குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அவர் மீதான குண்டாஸ் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட்-ன் 3வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிட்டிருந்தது.

அரசை பொறுத்தவரையில் இந்த நிலம் தரிசு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அரசி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் வருகிறது.

அரசு சொல்வதை போல இது தரிசு நிலம் கிடையாது என்றும், இது வேளாண் நிலம் என்று கூறி திருவண்ணாமலை மக்கள் ‘மேல்மா சிப்காட்’ விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி இருக்கையில் 126வது நாளாக கடந்த நவம்பர் 4ம் தேதியன்று இவர்கள் பேரணி நடத்தியபோது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர். திமுகவின் கூட்டணி கட்சிகளும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், விவசாயி அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
Share on:

விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்; பின்வாங்கிய அமலாக்கத்துறை?


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டது. இதையொட்டி,சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2ஆம் தேதி புகார் மனு அளித்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருந்ததையொட்டி, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து விவசாயிகள் மீதான வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on: