விடை காணாமலே விடைபெறும் கோயம்பேடு..15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது ஏன்?


விடை காணாமலேயே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விடை பெறுகிறது… 15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பேருந்து நிலையங்கள் மாறிகொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

சென்னைக்கு வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் சென்னை பாரிஸ் கார்னரில் இருந்தது. இந்த பேருந்து நிலையத்திற்கு அன்றைக்கு அண்ணா சாலை வழியாகவே அனைத்து பேருந்துகளும் சென்று வந்தன. அப்போது அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய வணிகப்பகுதியாக அண்ணா சாலை திகழ்ந்ததால், மக்கள் பயணிக்கவே முடியாத அளவிற்கு அண்ணா சாலை இருந்தது.. இதையடுத்து 2003ல் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு அமைக்கப்பட்டது.

கோயம்பேட்டை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்றால், அண்ணா சாலை வரவேண்டியது இல்லை. தாம்பரத்தில் இருந்து பைபாஸ் மூலம் நேரடியாக மதுரவாயல் சென்று அப்படியே கோயம்பேடு போக முடியும் என்பதால், வரவேற்பு கிடைத்தது. மேலும் கோயம்பேடுக்கு மணி மகுடமாக கொத்தவால் சாவடி மார்க்கெட்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் வடசென்னை, தென்சென்னை என இருபகுதி மக்களும் பயணிக்க கூடிய வகையில் கோயம்பேடு மையப்பகுதியில் இருந்ததால், அந்த பகுதி அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் அண்ணா சாலை போலவே வடபழனி, அசோக் நகர் செல்லும் ஜவஹர்லால் நேரு சாலை நெரிசலில் சிக்கி திணற தொடங்கியது.

இது ஒருபுறம் எனில், 2000க்கு பிறகு வேளச்சேரி பகுதிகளில் ஐடி கம்பெனிகள் வேகமாக வளர்ந்ததால், அதனை சுற்றியுள்ள கந்தன்சாவடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பல்லாவரம், குராம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் தாங்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கம் ஏற்பட்டது. இதனால் வடபழனி சாலையை விட கடுமையான நெரிசலை ஜிஎஸ்டி சாலை சந்தித்தது. குறிப்பாக பெருங்களத்தூர் முதல் ஆலந்தூர் வரை எத்தனை பாலம் போட்டாலும் மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

குரோம்பேட்டை டூ துரைப்பாக்கம் (ஓஎம்ஆர், திருவான்மியூர், வேளச்சேரி) செல்ல மேம்பாலம் அமைக்கப்பட்ட போதும், மேம்பாலத்திலேயே சிக்னல் போட வேண்டிய அளவிற்கு வாகன நெருக்கம் அதிகரித்துள்ளது. சென்னை நகரத்தைவிட தாம்பரம் டூ வேளச்சேரி, தாம்பரம் டூ ஆலந்தூர் பகுதிகளில் வாகன நெருக்கம் அதிகரித்துள்ளது. காலை, மாலை வேளைகளில் வாகனம் ஒட்டவே முடியாத அளவிற்கு நெரிசல் அதிகமாகி உள்ளது. இந்த சூழலில் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் இந்த வழியாகவே தினமும் பயணிப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பிய தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இன்று திறக்கப்படுகிறது.

இந்த கிளாம்பாக்கம் என்பது சென்னையின் மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது. துறைமுகம் செல்லும் லாரிகள், மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் பெருங்களத்தூர் சாலை, காஞ்சிபுரம் வண்டலூர் சாலை, கேளம்பாக்கம் சாலை, வண்டலூர் பூங்கா, செங்கல்பட்டு திருச்சி சாலை ஆகியவை இணையும் இடத்தில் இருக்கிறது. சென்னைக்கு இங்கிருந்து எந்த பகுதிக்கும் போக முடியும் என்பதால் கிளாம்பாக்கத்தை தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. இன்னமும் கிளாம்பாக்கம் பேருந்துகள் நேரடியாக உள்ளே வர மேம்பாலம் அமைக்கப்படவில்லை. ரயில் நிலையமும் அமைக்கப்படவில்லை. வண்டலூரில் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி மாறித்தான் வர வேண்டும்.

இது ஒருபுறம் எனில், பாரிஸ் கார்னருக்கு மாற்று என ஆரம்பிக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் விடை காணாமலேயே விடை பெறுகிறது.. ஒவ்வொரு 15 வருடத்திற்கு ஒருமுறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது தொடர்கதையாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கிளாம்பாக்கமும் இதேபோல் அசுர வளர்ச்சி அடைய போகிறது. அதன் காரணமாக வாகன நெருக்கமும் அதிகரிக்கவே போகிறது என்பதே எதார்த்தமான உண்மை.
Share on:

சினிமா நடித்து வருஷமாச்சு. கர்ஜனை பேச்சை கேட்டு காலம் பல ஆச்சு.ஆனாலும் அலை அலையாய் மக்கள் வெள்ளம்!


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதை பார்க்கும் போது இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் என்பது நிரூபணமாகிறது

ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை அவருடைய இறப்பிற்கு வந்த கூட்டம்தான் சொல்லும். பொது வாழ்வில் இருந்த அந்த மனிதர் எப்படியெல்லாம் மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் என்பதும் தெரியும்.

இது நிறைய அரசியல் கட்சியினர், பிரபலங்கள் இறப்பில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் விஜயகாந்த் அரசியல் கட்சியில் இருந்தாலும் அவருக்கு எதிரி என யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் நன்மை செய்துள்ளார். விஜயகாந்த் நடித்து பெரிய ஸ்டாராக வந்த காலத்தில் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களின் படங்களிலேயே முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆனால் விஜயகாந்த் அந்த பாணியை மாற்றி 54 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளாராம். அது போல் ஷூட்டிங்கில் ஹீரோ, ஹீரோயினுக்கு ஒரு வகையான உணவு, டெக்னீசியன்களுக்கு ஒரு மாதிரியான உணவு என இருந்தது. அதிலும் டெக்னீசியன்களுக்கு ஒரு வேளைதான் உணவு என இருந்தது.

ஆனால் இதை மாற்றி 3 வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்தவர் விஜயகாந்த். மேலும் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் கட்டாயம் அசைவ சாப்பாடு போட வேண்டும் என்றாராம். அது போல் ஹீரோ, ஹீரோயின் முதல் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே சாப்பாடுதான் என்ற நிலையையும் கொண்டு வந்தார்.விஜயகாந்தின் ஆபிஸில் 24 மணி நேரமும் உணவு கொடுத்து கொண்டே இருப்பார்களாம்.

அது மட்டுமல்லாமல் யாராவது இல்லை என்று கேட்டால் அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட விசாரிக்காமல் உடனே கையில் இருக்கும் பணத்தை கொடுத்துவிடுவாராம். மேலும் தனது கல்லூரியில் நிறைய ஏழை எளியவர்கள் படிக்க இலவசமாக சீட்டு கொடுத்துள்ளார்.

இப்படி பல உதவிகளை செய்த விஜயகாந்த் இன்று காலை நிமோனியா தொற்றால் காலமானார். இந்த செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்கள் கதறி அழுகிறார்கள். இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு அவர்கள் கூடினர். விஜயகாந்தின் உடல் காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் 4 கி.மீ., தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனது.

கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை சுற்றிலும் மக்கள் தலைகள் காட்சியளிக்கின்றன. மேம்பாலத்திற்கு மேல் மக்கள் தலைகளாக உள்ளன. கீழேவும் இப்படித்தான் கடல் அலை போல் மக்கள் திரண்டுள்ளார்கள். கட்சி அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

விஜயகாந்த் அண்மைக்காலமாக கட்சி பணிகளில் ஈடுபடவில்லை, படங்களில் கூட நடிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி கூடியிருக்கிறார்கள். இதுதான் அவர் வாழ்ந்த வாழ்கையின் அடையாளம்.
Share on:

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா JN 1 பரபரக்கும் ஆய்வுகள்!


தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது வேகமாக பரவி வந்தாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாததால் பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.

அது போல் இந்த புதிய வகையான வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் தெரிவிக்கிறார்கள். இது கேரளாவில் பரவி வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 200க்கு மேல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இத்தனை நாட்களாக ஜே.என். 1 வைரஸ் பரவல் இல்லை என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது 4 பேருக்கு புதிய வகை கொரோன வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 4 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அவர்கள் 4 பேருக்கும் புது வகையான கொரோனா பரவியது தெரியவந்தது.

அந்த 4 பேரும் மதுரை, திருவள்ளூர், கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர். இந்த வகை கொரோனா வீரியம் குறைந்தது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இந்த புதிய வகை கொரோனாவுக்கும் இருக்கும்.

கொரோனாவுக்கு அளிக்கும் சிகிச்சையே இந்த புதிய வகைக்கும் அளிக்கப்படுகிறது. மக்கள் கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் , கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே நோய் தீவிரமாகாமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Share on:

தற்போதைய அதிமுக தலைமையானது, களத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதன் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!


1997 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி மாநிலம் முழுவதும் அமோக வெற்றி பெற்றது. அப்போதைய திமுக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கு ‘திரைப்பட கவர்ச்சியே காரணம்’ என்றார். ஆனால் சிறிது காலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

நாஞ்சில் கே.மனோகரன் உள்ளிட்ட சில முதல் கட்டத் தலைவர்கள், எம்.ஜி.ஆரை விட்டு திமுகவுக்குச் சென்றபோது, முக்கிய கூட்டணி கட்சிகள் இல்லாமல், பொருளாதார சிக்கலில் இருந்துகொண்டு, எம்.ஜி.ஆர் துணிச்சலுடன் போராடினார். 1980 மே மாதம் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்.

1972-ல் எம்.ஜி.ஆர் உருவாக்கியதை விட இன்றைய அதிமுக ஒரு திடமான அமைப்பையும், தீவிர திமுக எதிர்ப்பு தொகுதியையும் கொண்டுள்ளது.

அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கை மூலம் அமைச்சர் ஒருவரை சிறையில் இருக்கிறார். மற்றொருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளமும், தென் மாவட்டங்களில் பெய்த மழையும் திமுக அரசின் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிடல் இன்மையை காட்டிக் கொடுத்துள்ளது.

இருப்பினும் இதை பயன்படுத்தி களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதிமுகவின் எதிர்க்கட்சி செயல்பாடுகள் அரிதாகவே உணரப்பட்டது. தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி வெறும் சில நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்துவிட்டு சேலம் திரும்பிவிட்டார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் வேண்டிய நேரத்தில் மக்களிடம் சென்றார்கள். திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை கேள்வி எழுப்புவதில் ஜெயலலிதா அவர்கள் சிறந்து விளங்கினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இன்னும் பிரகாசிக்கவில்லை.1980ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, எம்.ஜி.ஆர் விவசாயிகள் சங்கம், கம்யூனிஸ்டுகள் போன்றோரை அணுகினார் அவர்களை தன் பக்கம் இழுத்தார். ஆனால் தற்போதைய அதிமுக தலைமை அனைத்து திமுக எதிர்ப்பு சக்திகளையும் ஒன்று திரட்டி மாற்று அணியை உருவாக்க தவறுகிறது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கட்டி கட்சியை ஒருங்கிணைக்க தவருகிறார் எடப்பாடி பழனிசாமி.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தலைமைக்கு பிறகு இன்று அதிமுக திடமான தொண்டர்பலம் உள்ள அமைப்பாக உள்ளது. ஆனால் அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்கள் இல்லை, எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட அவரோடு பயணித்த அவரது மரபைச் சுமந்து செல்பவர்கள் அதிமுகவை வழிநடத்தினால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்.
Share on:

100 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி..இதே டிசம்பர் 16-18-ல் இதே இடங்களில் வரலாறு காணாத வெள்ளம்-ஆச்சரியம்!


தற்போது திருநெல்வேலியை புரட்டிப் போட்ட தாமிரபரணி பெருவெள்ளம் இதே தேதிகளில் இதே இடங்களில் இதே பாதிப்புகளுடன் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு நிகழ்ந்தது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று ஆச்சரியம்!

குமரிக் கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. இப்பெருமழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் திருநெல்வேலி மாவட்டம் மீள முடியவில்லை.

வரலாற்றில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு டிசம்பர் 16, 17 தேதிகளிலும் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் இதே பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. அதுவும் இப்போது எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ அதே இடங்களில் அதே மாதிரியான பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி இந்து நாளிதழில் “Madura Floods” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

-தாமிரபரணி நதியில் கடந்த 4 நாட்களாக பெருவெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

– திருநெல்வேலியின் பெரும் குளங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது

-திருநெல்வேலி நகரத்தின் சன்னியாசி கிராமம், கைலாசபுரம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை பகுதிகளில் 3 முதல் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

– திருநெல்வேலி பாலம் ஶ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை 3 நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன

– ரயில் நிலையங்களின் ஆவணங்கள், ஊழியர் குடியிருப்புகள், ரயில்வே சொத்துகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

– ஶ்ரீவைகுண்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. – ரயில்வே தடத்தில் தந்தி கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

– ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன

– தென்காசி முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதையில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நாளிட்ட தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போதைய பெருவெள்ளத்திலும் சிந்துபூந்துறை, வீரராகவபுரம் உள்ளிட்ட திருநெல்வேலியின் பல பகுதிகள் பல அடி உயர வெள்ளத்தில் மூழ்கின. ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் 3 நாட்களாக வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்டது. ஶ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 700க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தவியாய் தவித்து ராணுவம் வந்து மீட்கும் நிலைதான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

ஊழல் வழக்கால் MLA, பதவியை இழக்கிறாரா அமைச்சர் பொன்முடி?


திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம்.

ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது? அவர் அமைச்சராக தொடர முடியுமா?

கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,விற்கான தகுதியை இழக்கிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
Share on:

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. சொத்துக்குவித்தது உறுதி.. 21ல் தண்டனை.. ஹைகோர்ட் அதிரடி!


சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 21ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் எனவும் ஹைகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து, மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவியை விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்துள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆக.10-ல் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதி தனது விளக்கத்தை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்கக் கோரி பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்க உத்தரவிட்டார். அதேபோல, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவில், வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் நிர்வாக ரீதியில் எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரியும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க கோரியும் பொன்முடி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தலைமைப் பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். அதேபோல, வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

அப்போது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு ஜூன் 6-ம் தேதி முதல் நேர்த்தியாக நகரத் தொடங்கியுள்ளது என்றும், ஜூன் 23-ல் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட 4 நாட்களில், ஜூன் 28-ல், 172 சாட்சிகள், 381 ஆவணங்களுடன் 226 பக்க தீர்ப்பில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டார். பொன்முடி 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறினார். தண்டனை விவரங்கள் வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்

அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Share on:

திருநெல்வேலி சீமையையே அதிரவைத்த 93 செமீ மழை. சென்னை கவனிக்க வேண்டிய முக்கியமான பாடம்.


ஒரே நாளில் 40, 50, 60, 90 செமீ என திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதனால் ஆறு குளங்களில் அளவுக்கு மீறி வந்த வெள்ளம் ஊருக்குள் வெளியேறியது.. ஆனால் சென்னையில் நடந்தது அப்படி அல்ல.. ஏனெனில் சென்னை சில பகுதிகள் ஆற்றிலும்,. ஏரியிலும் தான் இருகின்றன. எனவே சென்னை கற்க வேண்டிய முக்கியமான பாடத்தை பார்ப்போம்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 2,3, 4 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. சென்னையில் தொடர்ந்து 36 மணி நேரம் மழை பெய்த காரணத்தால், சென்னை மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம், அளவுக்கு மீறி பெய்த மழை. அந்த தண்ணீர் வெளியேற தேவையான வடிகால்கள் இல்லாதது தான்.

முதல் பிரச்சனையான அளவுக்கு மீறி பெய்த மழையை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் இரண்டாவது காரணமாக தண்ணீர் வடிய போதிய கால்வாய்கள் பிரச்சனையை சரி செய்ய முடியும். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் சென்னை அதிகப்படியான ஏரி நிலங்களை இழந்துள்ளது. ஏன் சில ஏரிகளே காணாமல் போய்விட்டன. 800களில் இருந்த வேளச்சேரி ஏரியின் பரப்பளவை இப்போது ஒப்பீட்டால் உண்மை நிலை தெரியும்.

இதேபோல் பள்ளிக்கரணை ஏரியின் பரப்பளவை 1975களில் இருந்ததை இப்போது ஒப்பிட்டால் நிச்சம் அதிர்ந்து போவீர்கள். அந்த அளவிற்கு கபளீகரம் செய்துவிட்டனர். இதேபோல் சென்னையின் போரூர், முகபேரு, கோயம்பேடு, என பல ஏரிகள் வளர்ச்சி என்ற பெயரில் சுருங்கி உள்ளன.

முன்பெல்லாம் மழை என்பது பரவலாக பெய்யும். இப்போது அப்படி அல்ல.. ஒரே நாளில் 40, 50, 60, 90 செமீ என மழை பெய்கிறது. இப்போது சொன்ன மழை அளவு திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துள்ளது. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறு மற்றும் குளங்களில் அளவுக்கு மீறி வந்த வெள்ளம் ஊருக்குள் வெளியேறியதால் பாதிப்புஅதிகமாக உள்ளது. அதேநேரம் கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்படவில்லை. மிகச்சிறிய அளவில் தான் அங்கு தண்ணீர் கரையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுதவிர கடல் மட்டத்தில் இருந்து நல்ல உயரத்தில் உள்ளன. இதனால் கண்டிப்பாக என்ன மழை பெய்தாலும் உடனே கடலில் ஓடிப்போய் கலந்துவிடும்.

ஆனால் ஒரே நாளில் 40, 50, 60, 90 செமீ பெய்தால் சென்னை கண்டிப்பாக தாங்காது. சென்னையின் வடிகால் அமைப்புகள் நிச்சயம் இவ்வளவு மழையை தாங்கும் அளவிற்கு கிடையாது. மற்ற ஊர்களில் இவ்வளவு மழை பெய்தால் ஆறுகள், குளங்கள் உள்ள பகுதிளில் தான் வெள்ளம் பாயும். ஆனால் சென்னையில் மழை பெய்தால் , சென்னை முழுவதும் காட்டாறு போல் தான் தண்ணீர்போகும். எனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விஷயத்தில் அரசு திடமான முடிவெடுக்க வேண்டும். முதலில் மிக ஆபத்தான நீரின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். ஏனெனில் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட, கீழ்கட்டளை முதல் பள்ளிக்கரணை வரை உள்ள மோசமான ஆக்கிரமிப்புகள் காரணம் ஆகும்.

ஏரியின் போக்கையே மாற்றும் வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.அவற்றை எல்லாம் அகற்றி தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஆழப்படுத்தி, தடுப்பு சுவர்களை எழுப்பி வைக்க வேண்டும். அந்த தடுப்பு சுவர்கள் மழைக்கு தாங்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் ஓரளவு தப்பிக்க முடியும். மழை நீர் வெளியேறும் பகுதிகளில் குடியிருப்போருக்கு மட்டுமல்ல, அந்த ஆக்கிரமிப்புகளால் பலர் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

சென்னையில் நீர் நிலைகளில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த நீர் நிலை மற்றும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுவது தான் எதிர்காலத்தில் சென்னையை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் இனி வரும் காலங்களிலும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இதேபோல் சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்து நேரடியாக வெள்ள நீர் கடலில் கலக்க புதிய நீர் வழிப்பாதை திட்டத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் சென்னையின் பாதிப்பு ஓரளவு குறையும் வாய்ப்பு உள்ளது.
Share on:

கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன்!


அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கே.சி.பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதி திருமாள் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
Share on:

கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்!


மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி உள்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்களை எஞ்சிய தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, திமுக எம்.பி கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட 9 பேர் எஞ்சிய தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானத்தையும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், ”நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த பாதுகாப்பு அத்துமீறல் மிகப் பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை தோல்வி. நேற்று நடந்த சம்பவத்தை அடுத்து அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அவைக்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அவைக்கு வந்து பதில் அளிக்கக் கூடாது என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று கோரியதற்காக மக்களவை உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அவையில் இல்லாத திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் பெயர் பட்டியலில் பலரது பெயரை தோராயமாக சேர்த்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. அரசின் இந்தச் செயல் அர்த்தமற்றது. நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய விஷயத்தை அரசு அணுகும் விதம் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. எங்கள் எதிர்ப்பை எந்தெந்த விதங்களில் தெரிவிக்க முடியுமோ அவற்றை நாங்கள் தெரிவிப்போம்.

நாடாளுமன்றம் நாளை கூடும்போதும் நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம். நேற்று என்ன நடந்தது? அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு என்ன திட்டமிட்டுள்ளது? என்ற கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். எங்களின் இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. ஏனெனில், இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பானது. நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களுக்கானது; நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. எனவே, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ சபைக்கு வந்து திட்டவட்டமான அறிக்கையை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிக்கை வாசித்தார். அப்போது, “நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. உறுப்பினர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, இது குறித்து அரசு கவலை கொள்கிறது. சம்பவம் நடந்த உடன் அவைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை சபாநாயகர் நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில பரிந்துரைகள் ஏற்கனவே அமலில் இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விவகாரம் குறித்து உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை யாரும் அரசியலாக்கக் கூடாது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளன. 1974ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து ரத்தன் சந்திர குப்தா என்பவர் உரக்க குரல் எழுப்பினார். அவரிடம் 2 துப்பாக்கிகள், ஒரு வெடிகுண்டு, துண்டு அறிக்கைகள் ஆகியவை இருந்தன. இதேபோல், அதே ஆண்டு ஜூலை 26ம் தேதி பிப்ளப் பாசு என்பவர் பார்வையாளர் மாடத்துக்கு வெடிபொருட்களைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு நவம்பர் 26ம் தேதி சத்யதீப் சிங் என்பவர் பார்வையாளர் மாடத்துக்கு வெடி பொருட்களைக் கொண்டு வந்தார். 1999-ம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் இருவர் மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
Share on: