பா.ஜ.கவை வலிமையோடு எதிர்க்க துணிவில்லையா? – EPS-யை கேள்வி கேட்கும் KCP!


பா.ஜ.கவை வலிமையோடு எதிர்த்து நிற்க துணிவு இல்லாத எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு ஏன் தலைமை ஏற்கிறார்? என்று முன்னாள் எம்.பியான கே.சி.பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் அவர் சில கேள்விகளை பதிவிட்டுள்ளார் KCP questions EPS.

ஜெயலலிதா அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரதமர் மோடியும் அண்ணாமலையும் கச்சத்தீவு குறித்து பேசுகிற பொழுது அதில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் அம்மாவின் முயற்சி குறித்தும் சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த தயக்கம்?

பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டு சென்றதற்கு “ஜெயலலிதா அம்மாவின் கனவுகளை சிதைத்து பாவம் செய்கிறார்கள்” என்கிறார் பிரதமர் மோடி. ஜெயலலிதா அம்மா தான், மோடியா? லேடியா? என்று பாஜகவையும் மோடியையும் எதிர்த்து களம் கண்டார் அந்த வழியில் நாங்கள் பயணிக்கிறோம் என்று மோடிக்கு பதில் சொல்ல பயப்படுவது ஏன்?

“ஜாதிகள் இல்லையடி பாப்பா , குலம் தாழ்த்தி , உயர்த்தி சொல்லல் பாவம் பாப்பா!” என்னும் பாரதியாரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி சொல்கிறார். ஆனால் பாரதியார் சொன்ன இந்த கருத்து அவருக்கு புரியவில்லையா? அல்லது தெரியவில்லையா? அண்ணாமலை, நல்ல சாதிய பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்றால் மற்ற சாதிகளெல்லாம் நல்ல சாதிகள் இல்லையா?சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக. அதன் சார்பாக கருத்து தெரிவிக்க ஏன் எடப்பாடி கே.பழனிசாமி தயங்குகிறார்?

கருப்பு பணத்தை ஒழிக்க 2016-ல் “#Demonetisation” கொண்டுவந்தார் பிரதமர் மோடி அதன் மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டாரா? ஒவ்வொரு குடும்பமும் வீட்டில் சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தை ஒரே இரவில் செல்லாது என்று சொன்னார்.

இதில் ஏழைகளும் நடுத்தர குடும்பத்தினரும் தான் பாதிக்கப்பட்டார்கள் கார்ப்பரேட்களுக்கு இதில் பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று அவர்களின் கருப்பு பணத்தில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவும்,திமுகவும் பங்கு வாங்கியிருக்கிறது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 200 கோடி கறுப்புப்பணம் செலவிடப்படுகிறது.

அப்படி பார்த்தால் நாடுமுழுவதும் கருப்புப்பண புழக்கம் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடியாக உள்ளது. கருப்புப்பணத்தை ஒழிக்க தவறிய பாரதிய ஜனதா குறித்து பேசவும் EPS தயங்குகிறார்.

“அண்ணாமலைக்கு பணம் சம்பாரிக்க ஆசை இல்லை என்பதால் தான் பாஜகவில் இணைந்துள்ளார் என்கிறார் மோடி” ஆனால் ஒரு IPS அதிகாரி கட்சியில் இணைந்ததும் தலைவராக்கப்படும் அளவிற்கு திராவிட கட்சிகளில் தலைமைக்கு பஞ்சம் ஏற்படவில்லை என்பதை உணர்த்த தவறிவிட்டார்கள்.

“தான் செய்கிற செயல் எல்லாமே வாக்குக்காகவும், ஆட்சிக்காகவும் தான் செய்கிறேனா” என்கிறார் பிரதமர் மோடி. கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 முறை தமிழகம் வந்திருக்கிறார். ஆனால் இந்த 10 வருட ஆட்சியில் எத்தனை முறை தமிழகம் வந்திருக்கிறார்?

இந்த 10 ஆண்டு ஆட்சியில் பாஜக அரசால் தமிழகத்திற்கு என்று தனித்துவமிக்க பெரிய திட்டங்கள் என்ன கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழகம் பல வகைகளில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது மற்றும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசனுக்கு பதில் சொல்லும் வேகத்தையும், ஆக்ரோசத்தையும் எடப்பாடி கே.பழனிசாமி, மோடியிடம் காட்ட வேண்டும் அப்பொழுது தான் நீங்கள் பாஜகவை எதிர்த்து களம் காணுகிறீர்கள் என்று மக்கள் நம்புவார்கள்.

இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Share on:

வசமாக சிக்கிய எடப்பாடி! தன்னைவிட வயதில் பெரியவரா சசிலா! கோர்த்துவிட்ட கேசிபி!


பெரியவர்கள் காலிதான் தான் விழுந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை விட சசிகலா வயதில் இளையவர் என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கூறி உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையில் எய்ம்ஸ் செங்கலை காண்பித்து பரப்புரை செய்து கொண்டிருந்தார்.

திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஈபிஎஸ், “நாடாளுமன்றத்திற்கு சென்று செங்கலை காட்ட முடியுமா?, ஸ்கிரிப்ட மாத்தப்பா” என கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் கல்ல காட்டுறன்; ஆனால் ஈபிஎஸ் பல்லை காட்டுகிறார்” என்று கூறி மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா அன்று பிரதமர் மோடி உடன் சிரித்துக் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை காட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி உடன் இருக்கும் படத்தையும், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக் உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படங்களையும் காட்டி உதயநிதிக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.

இதற்கு எதிர்வினையாக சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழும் புகைப்படத்தை காட்டி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

இன்றைய தினம் மதுரை வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் தவறில்லை” என கூறி இருந்தார்.

இந்த நிலையில் சசிலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்த தேதிகளை ஒப்பிட்டு அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி ட்வீட் செய்துள்ளர். அதில், எடப்பாடி பழனிசாமி பிறந்த தேதி (20.03.1954) , சசிகலா பிறந்த தேதி (18.08.1954). சசிகலா EPS-ஐ விட இளையவர்.

எந்த பொதுத்தேர்தலை சந்தித்து @EPSTamilNadu முதல்வரானார்? எந்த தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் ஆனார்? இரண்டும் இல்லையே.

போட்டியிடுபவர்கள் யாரும் மிட்டா மிராசு அல்ல சாதாரண தொண்டர்கள் என்று கூறும் @EPSTamilNadu, 600 கோடி சொத்து உள்ள, மூன்று மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்த ஈரோடு வேட்பாளரிடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு சீட்டு கொடுத்தார்? ஜெயலலிதா அம்மாவால் ராவணோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராவணனின் பினாமி நாமக்கல் வேட்பாளர் தமிழ்மணிக்கு எதற்கு சீட்டு கொடுத்தார்? பல தொகுதிகளில் காண்ட்ராக்டர்களும் , கமிசன் ஏஜென்ட்களும் , வேறு கட்சியில் இருந்து சமீபத்தில் மாறிவந்தவர்களுக்கு தான் சீட்டுகொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட_அதிமுக உருவாக்க வேண்டும் என்பது தான் தொண்டர்கள் விருப்பம். ஆனால் அதிமுகவை தன் குடும்பச்சொத்து ஆக்குவது தான் EPS-ன் விருப்பமாக உள்ளது. எதற்கு தொண்டர்கள் மீது பழிபோடுகிறீர்கள் இன்றைய #அதிமுக வேட்பாளர்கள் களத்தில் திணறுவது அதிமுக ஒன்றுபட்டு இல்லை என்பதால் தான் அது உங்கள் சுயநலத்தின் காரணமாக உங்களுக்கு புரியவில்லை. தேர்தல் முடிவுகள் அதை உங்களுக்கு உணர்த்தும் என கேசி பழனிசாமி கூறி உள்ளார்.
Share on:

ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி கணேச மூர்த்தி உயிரிழந்தார்!


ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் கணேச மூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 24 -ந்தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Share on:

ஒன்றுபட்ட அதிமுகவாக இல்லாதது பொதுமக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை அதிமுகவிற்கு வாக்களிக்க யோசிக்க வைக்கிறது – கே.சி.பழனிசாமி


* 2014-ல் மோடியா? லேடியா? என்று களம் அமைத்து 40-ல் 38 தொகுதிகளை வென்றார் அம்மா. 2016-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்து பத்து மாதங்களில் (பிப்ரவரி, 2017) எடப்பாடி பழனிசாமி பொறுப்பெடுத்துக்கொண்டார். அதிமுக ஆளுகிற கட்சியாகவும், 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சிப்பொறுப்பும்,கட்சிப்பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் அடுத்தடுத்து 8 தொடர் தோல்விகளை மட்டும் தான் EPS-ஆல் பெறமுடிந்தது. அதற்கு இதுவரை கூறப்பட்ட காரணங்கள் பாஜக கூட்டணி மற்றும் இரட்டை தலைமை ஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி இல்லை மற்றும் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். அப்படி இருந்தும் கள நிலவரம் சாதகமாக உள்ளதா?

* தமிழக அரசியலில் அதிமுக வாக்கு வங்கி 35, திமுக வாக்கு வங்கி 30%, பாஜக உட்பட பிற கட்சிகள் சேர்ந்து 15%, வேட்பாளர்களை பார்த்து தேர்தலுக்கு தேர்தல் முடிவெடுப்பவர்கள் 20% என்பதாக தான் களம் இருந்தது. தற்பொழுது தேர்தல் களம் என்பது 4% இருந்த பாஜக வாக்கு வங்கி 10-12% ஆக உயர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. திமுக கூட்டணி பலத்தால் 45% வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் அதிமுக தன்னுடைய 35% வாக்கில் இருந்து இன்று 20% – 25% வாக்குகளுக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. பாஜக வளர்ச்சிக்கு என்ன காரணம்?, அதிமுக வாக்கு வங்கி வீழ்ச்சிக்கு என்ன காரணம்? திமுகவின் வாக்கு வங்கி உயர்வுக்கு என்ன காரணம் என்று EPS எண்ணிப்பார்க்கவேண்டும்.

* நேற்றைய திருச்சி கூட்டத்தில் 11மருத்துவ கல்லூரி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்கிற தன்னுடைய இரண்டு சாதனைகளை மட்டுமே முன்னிறுத்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த இரண்டுமே கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே முன்வைத்து பேசப்பட்டது அப்படி இருந்து ஆட்சிப்பொறுப்பிற்கு வர முடியவில்லை. இது வாக்கு கேட்கப்போகிற வேட்பாளர்கள் பேசவேண்டிய கருத்துக்கள். தலைமை திமுகவை கடுமையாக எதிர்த்து போதைப்பொருள் புழக்கம், தேர்தல் பத்திரம் விவகாரம், தலைவிரித்தாடுகிற லஞ்சம் & ஊழல், சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதில்லை.மக்கள் மத்தியில் ஏற்கனவே 90 நாட்களில் முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுப்பேன் என்ற ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் நடுநிலையாளர்கள் இதை எதோ மறைமுக ஒப்பந்தம் என்று நினைக்கிறார்கள்.

* அதே போல் பாஜகவையும் கெஜ்ரிவால் கைது, தேர்தல் பத்திரம் விவகாரம், மாநில உரிமைகள், தமிழகத்திற்கான நிதிப்பங்கீடு, மத்திய அரசின் திட்டங்கள் சரிவர தமிழகத்திற்கு கிடைக்காமல் இருப்பது, மதவாதம், சாதியவாதம் போன்ற விசயங்களில் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுப்பதில்லை. மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு “டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்” என பெயர் மாற்றம் செய்ய முன்வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் அதை கூட EPS கண்டித்து பேசவில்லை. அதனால் தான் இன்னும் பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

* கடுமையான திமுக எதிர்ப்பால் திமுக எதிர்ப்பு வாக்குகளை பெறவேண்டும். அதேபோல் கடுமையான பாஜக எதிர்ப்பால் பாஜக எதிர்ப்பு வாக்குகளையும் பெறவேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-க்கும், ஜெயலலிதா அம்மாவுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக என்கிற கட்சிக்கும் இருக்கிற வாக்கு வங்கி 25 சதவீதத்தை மட்டுமே குறிவைத்து தக்கவைத்துக்கொள்ள பார்க்கிறார் EPS. மேலும் பணபலம் மட்டுமே உள்ள கட்சிக்கு புதியவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி வருகிற வாக்குகளை தனக்கான வாக்குகளாக காட்ட முற்படுகிற இந்த செயல் எந்த அளவுக்கு கைகொடுக்கும்?

* வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மாறி மாறி வாக்களிப்பார்கள். திமுக மீது இருக்கும் அதிருப்தியால் அதிமுக தானாக ஆட்சிக்கு வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கிடுகிறார். ஆனால் அந்த மாற்று சக்தியாக வளரும் முயற்சியில் இன்று பாஜக தீவிரமாக உள்ளது. இந்த சூழலில் வருகிற தேர்தலில் ஒரு நல்ல வெற்றியைப் பெற்று பாஜக வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால் மட்டும் தான் 2026-ல் அதிமுக ஆட்சி சாத்தியமாகும்.

* அதிமுக கட்சிக்குள் நடக்கிற உட்கட்சி பிரச்சனைகள் கட்சிக்குள் ஒற்றுமையில்லாதது மற்றும் ஒன்றுபட்ட அதிமுகவாக இல்லாதது பொதுமக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை அதிமுகவிற்கு வாக்களிக்க யோசிக்க வைக்கிறது. பாஜகவை விட்டு விலகியதில் தவறில்லை ஆனால் சில உறுதியான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். அதே போல் பிரச்சார களத்தில் ஈடுகொடுக்கக்கூடிய அளவிற்கு EPS-ன் செயல்பாடுகளும் பேச்சுக்களும் இல்லை. அப்படி தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

* இன்னும் காலம் கடக்கவில்லை சில விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்த தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றால் தான் 2026 நமக்கான தேர்தலாக அமையும். அப்படி தவறினால் விளைவு எடப்பாடி பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாகும்.
Share on:

வடசென்னை அலுவலகத்தில் என்ன நடந்தது? ஜெயக்குமார் – சேகர்பாபு பரபர பேட்டி.


வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் திமுக அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவை கண்டித்து அதிமுகவினர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி ஜெயக்குமார், சேகர்பாபு பேட்டியளித்துள்ளனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி இன்று மதிய வேளையில், அதிமுக சார்பில் வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் மனோ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதேபோல், திமுக சார்பில் வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் வந்திருந்தார். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளனர்.

இதனால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்று வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், திமுகவின் அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முதலில் வந்தது அதிமுகதான் என தேர்தல் அதிகாரி கூறியும் சேகர் பாபு ஏற்க மறுத்து வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்தார். இதனால், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது. சுமார் 45 நிமிடமாக இந்த வாக்குவாதம் நீடித்தது. இதன் பின்னர் திமுகவை கண்டித்து அதிமுகவின் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “முதலில் அலுவலகத்திற்கு வந்தது நாங்கள் தான். நான் தான் முதலில் வந்தேன். அப்போது வேட்பாளர் வரவில்லை என்று என்னை வெயிட் பண்ண சொன்னார்கள். 4 நிமிடம் கழித்து மனோ வந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றோம். ஆனால் அங்கே எங்களுக்கு முன்பு 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துகொண்டு இருந்தார்கள்.

நாங்கள் வெளியே வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென திமுகவினர் திபுதிபுவென உள்ளே வந்துட்டாங்க.. வேக வேகமாக உள்ளே சென்று முன் வரிசையில் போய் உட்கார்ந்து விட்டார்கள். திரைப்படத்தில் பார்ப்பதுபோல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் திமுகவினர் திபுதிபுவென வந்தனர். வேட்புமனு தாக்கலின் போது திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

எங்களுக்கு 7 ஆம் நம்பர் டோக்கன் கொடுத்தனர். அவரது பினாமி தான் 2 ம் நம்பர் டோக்கன் வாங்கியிருந்தனர். திமுகவும் பினாமி. வேட்பாளரிலும் பினாமி தான். 8 ம் நம்பர் டோக்கனில் தான் அவர்கள் 2வது டோக்கன் வாங்கினர். இது தொடர்பாக தேர்தல் அலுவலரே சொல்கிறார் அதிமுகவினர் தான் முதலில் வந்தனர் என்று. அதிமுக தான் முதலில் வந்ததாக கூறிய தேர்தல் அலுவலர்களையும் திமுகவினர் மிரட்டினர். அதிமுக சார்பில் 5 பேர் தான் உள்ளே சென்றோம். ஆனால் திமுகவின் தரப்பில் இருந்து 8 பேர் உள்ளே வந்தனர்” என்றார்.

இதற்கிடையே அமைச்சர் சேகர்பாபு, திமுக வேட்பாளர் தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டோக்கனை பெற்றதாக கூறினார். சேகர்பாபு கூறியதாவது:- அவதூறு வார்த்தைகளை அதிமுகவினர் தேர்தல் அலுவலர் முன்பே பேசினர். கலாநிதி வீராசாமியின் மாற்று வேட்பாளரான ஜெயந்தி கலா அவர்கள் காலை 9 மணிக்கே வேட்பு மனுவிற்கான டோக்கனை பெற்றுவிட்டார். இந்த பிரச்சினையால் அவரை திரும்ப அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும், ஒட்டுமொத்தமாக எப்படி சொன்னாலும் சரி வென்றது உதயசூரியன் தான். டம்மி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தான் அதிமுக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இப்படி நாள்பட நாள்பட தோல்வி பயத்தால் இப்படி கட்டவிழ்த்து விடுவார்கள்.

பால் கனகராஜ் உள்ளே இல்லவே இல்லை. அவர் தோல்வி பயத்தால் எதை எதையோ பேசுகிறார். தேர்தல் அதிகாரியை மிரட்ட வேண்டிய வேலை என்ன இருக்கு சொல்லுங்க? இங்கே என்ன வாக்குப்பதிவா நடக்கிறது. எதையாவது ஒன்றை கற்பனையாக ஜோடித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்கள். தேர்தல் நடக்கும் வரை இப்படி தான் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்கள். இவ்வாறு சேகர்பாபு கூறினார். முன்னதாக இருவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டனர்.
Share on:

இவருக்கு பதிலாக இவர்! நெல்லை வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்!


நெல்லை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து வியாழன் அன்று, மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இறுதி பட்டியலாக அதிமுக அறிவித்தது. அதில் நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிம்லா முத்துச்சோழன் திமுகவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதிருப்தியால் கடந்த மார்ச் முதல் வாரத்தில் தான் அதிமுகவில் இணைந்தார்.திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். வழக்கறிஞராக உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். ஜெயலலிதாவை எதிர்த்து நின்று தோற்ற சிம்லாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக சார்பில் உறுதியளித்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியது.

இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சீட் தரப்படும் என உறுதி அளித்த நிலையிலேயே அவர் அதிமுகவில் இணைந்திருந்தார். அதன்படியே, எடப்பாடி பழனிசாமியும், சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை லோக்சபா தொகுதியில் சீட் வழங்கினார்.

ஆனால், சிம்லா முத்துச்சோழன் நெல்லை தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுகவில் பெரும் அதிருப்தி கிளம்பியது. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருப்பது அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் வரை இந்த அதிருப்தி எதிரொலித்தது.

இந்நிலையில், சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணியை நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நெல்லை புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும், திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் ஜான்சி ராணி உள்ளார்.

அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on:

மகளிருக்கு மாதம் ரூ.3000 முதல் ‘நீட்’டுக்கு மாற்று வரை: அதிமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்.


மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை என்பது போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையின் கவனிக்கத்தக்க அம்சங்கள்.

* ஆளுநர் பதவி நியமன முறையில் மாநிலங்களின் கருத்தை கேட்டு நியமிக்க வேண்டும்.
* உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தல்
* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தல்.
* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றியதை கைவிட வலியுறுத்தல்.
* சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை.
* மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட ஊதியம் ரூ. 450 ஆகவும், வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிக்கவும் வலியுறுத்தல்.

மத்திய அரசின் திட்ட நிதி பகிர்வு விகிதத்தை 75:25 சதவீதமாக மாற்றி அமைக்கவும், மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான தொகையை அதிகரிக்கவும், மத்திய அரசு வழங்கும் தமிழ் நாட்டிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் சம நீதியோடு திட்டங்கள் கிடைக்கவும் வலியுறுத்தல்.

* நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்கிட வலியுறுத்தல்.
* மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை.
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
* பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை மத்திய அரசின் மூலமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தல்.
* காவிரி – குண்டாறு – வைகை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கை.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தல்.

* நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை.
* டெல்டா கால்வாய்களில் கான்கிரீட் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்.
* பாண்டியாறு – புன்னம்புழா திட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்திட உரிய நடவடிக்கை.
* சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்கும் திட்டம்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு மாற்றுத் தேர்வு முறை. நீட்டுக்கு மாற்றாக +2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை முறை.

* மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, தேசிய அளவில் ஓர் இயக்கமாகவே செயல்படுத்த நடவடிக்கை.
* குடிமராமத்து திட்டத்தை தேசிய திட்டமாக நாடு முழுவதும் செயல்படுத்த வலியுறுத்தல்.
* உச்சநீதிமன்றத்தில் கச்சத் தீவை மீட்க தொடரப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வலியுறுத்தல்.
* தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் உள்ளடங்கிய கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தல்.
* இதர பிற்பட்ட வகுப்பினரில் மேல் நிலையினர் எனப்படும் கிரிமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வலியுறுத்துதல்.
* உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை.
* நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கென்று தனி பாதை அமைக்க வலியுறுத்தல்.
* மருத்துவ பணியாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க முயற்சி.

சாயப் பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண “ஹைடெக் சுத்திகரிப்பு’’ நிலையங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.

* வக்ஃப் வாரியம் பாதுகாக்கப்படும். இஸ்லாமிய சமுதாயத்தின் நியாயமான கோரிக்கையின் பக்கம் அரணாக நிற்கும்.
* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட நலவாரியம்.
* வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று, ஆபத்தான சூழலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* பழங்குடியினருக்கு சாலை வசதி – “ஏகலைவா’’ பள்ளி வசதி செய்துதர நடவடிக்கை.
* சிறு, குறு நடுத்தர தொழில் மேம்பாடுபெற மின்சார மானியம், கடன் வசதி, நிலுவை கடன் தவணைக்கு கால அவகாசம், வரி குறைப்பு நடவடிக்கை.

விவசாயத்தை உயிர்நாடியாக காக்கும் வகையில், தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதல், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விதை உற்பத்தி மானியம், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 6,000த்தை ரூ. 12,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை உள்ளிட்டவை.

* நிபந்தனையின்றி மாநில அரசுகள் கடன்கள் பெற மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்க வலியுறுத்தல்.
* இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை.
* பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க வலியுறுத்தல்
* ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகளை விலையில்லாமல் அளிக்க வலியுறுத்தல்.
* போதைப் பொருள் கடத்திய திமுக நிர்வாகிகள் மீது, சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை.
* நெகிழிப் பொருட்களுக்கான நிரந்தர தடை.
* சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டம்.

மத்திய – மாநில அரசுகளிடையேயான நிதி பகிர்வு சமநிலையில் இருக்கவும் 2026-க்கு பிறகு பொருட்கள் மற்றும் சேவை வரியோடு செஸ் வரியை இணைக்கவும் வலியுறுத்தல்.

* விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்.
* தடையில்லா மும்முனை மின்சாரம்.
* கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம்.
* மாநிலங்களுக்கு இடையேயான தேசிய வளர்ச்சி ஆணையத்தை செயல்படுத்துதல்
* தமிழகத்தில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையம்.
* நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்றுதல்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை.

* தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் விரிவாக்கம்.
* மகளிர் உரிமைத் தொகை: ஒவ்வொரு ஏழை குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ. 3,000.
* இலவச வீட்டு மனை மற்றும் வீடு கட்டும் திட்டம்.
* கிராம பொருளாதாரம் மேம்பாட்டு திட்டம்.
* கிராமப்புற இளைஞர்களுக்கு சர்வதேச அளவிளான விளையாட்டு பயிற்சி மையம்.

இளைஞர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம், திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை; வேலைக்கு ஏற்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை.

* மீனவர்கள் எளிதாக கடன் பெற மீனவர்களுக்கென்று பிரத்யேக வங்கிகள், மீனவர்களுக்கு பிரத்யேகமாக இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை.
* பழனி-கொடைக்கானல் ரோப்கார் அமைத்தல், கும்பகோணத்தை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்துதல்.
* மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதார உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 5,000/- வழங்குவதற்கு நடவடிக்கை.
* சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகை மத்திய அரசால் முழுமையாக வழங்கவும், அப்பெற்றோரின் ஆண்டு உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தவும் வலியுறுத்தல்.
* மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்திற்கு உறுதி அளித்தல், உதவித் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை.
* ரயில் சேவை கூடுதல் வழித்தடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுப்போம் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
Share on:

விஜயபாஸ்கர் வீடு, ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் ஜி ஸ்கொயர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சற்றுமுன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் புதுக்கோட்டை இலுப்பூர் என்ற பகுதியில் உள்ள அவரது வீட்டில் மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய பத்து இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருவதாகவும் சென்னை அண்ணாநகர், எழும்பூர், நீலாங்கரை, அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளின் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது என்றும் அதேபோல் சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய இடங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் தற்போது அறிவித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அக்கட்சித் தலைவர் நெல்லை முபாரக் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. எஸ்டிபிஐக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

வடசென்னை – ராயபுரம் மனோ
தென்சென்னை – ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் – சந்திரஹாசன்
நாகை – சுர்ஜித் சங்கர்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தேமுதிக-க்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தேமுதிக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி தேமுதிகவிற்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி அல்லது மயிலாடுதுறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மேலும் தேமுதிக தரப்பில் ராஜ்யசபாவில் ஒரு இடம் வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகவும் இதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Share on:

மோடியின் கோவை ‘ரோடு ஷோ’வில் நிறுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் – நடவடிக்கை என்ன?


கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியின்போது பள்ளி மாணவர்களை பங்கேற்று நிற்கவைத்த அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர் புனிதா உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் சேலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ. தொலைவு வாகன பேரணி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். அதேவேளையில், பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், “கோவையில் பிரதமர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும். குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரான என புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய் பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட கல்வி அலுவலர் புனிதா இன்று பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பள்ளி மாணவர்களை பிரதமரின் வாகன பேரணியில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பள்ளி குழந்தைகளை வாகன பேரணிக்கு அழைத்து சென்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தது குறித்து பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் பதில் குறித்த அறிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.
Share on: