இவருக்கு பதிலாக இவர்! நெல்லை வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்!


நெல்லை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து வியாழன் அன்று, மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இறுதி பட்டியலாக அதிமுக அறிவித்தது. அதில் நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிம்லா முத்துச்சோழன் திமுகவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதிருப்தியால் கடந்த மார்ச் முதல் வாரத்தில் தான் அதிமுகவில் இணைந்தார்.திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். வழக்கறிஞராக உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். ஜெயலலிதாவை எதிர்த்து நின்று தோற்ற சிம்லாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக சார்பில் உறுதியளித்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியது.

இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சீட் தரப்படும் என உறுதி அளித்த நிலையிலேயே அவர் அதிமுகவில் இணைந்திருந்தார். அதன்படியே, எடப்பாடி பழனிசாமியும், சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை லோக்சபா தொகுதியில் சீட் வழங்கினார்.

ஆனால், சிம்லா முத்துச்சோழன் நெல்லை தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுகவில் பெரும் அதிருப்தி கிளம்பியது. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருப்பது அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் வரை இந்த அதிருப்தி எதிரொலித்தது.

இந்நிலையில், சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணியை நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நெல்லை புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும், திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் ஜான்சி ராணி உள்ளார்.

அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on:

மகளிருக்கு மாதம் ரூ.3000 முதல் ‘நீட்’டுக்கு மாற்று வரை: அதிமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்.


மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை என்பது போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையின் கவனிக்கத்தக்க அம்சங்கள்.

* ஆளுநர் பதவி நியமன முறையில் மாநிலங்களின் கருத்தை கேட்டு நியமிக்க வேண்டும்.
* உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தல்
* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தல்.
* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றியதை கைவிட வலியுறுத்தல்.
* சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை.
* மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட ஊதியம் ரூ. 450 ஆகவும், வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிக்கவும் வலியுறுத்தல்.

மத்திய அரசின் திட்ட நிதி பகிர்வு விகிதத்தை 75:25 சதவீதமாக மாற்றி அமைக்கவும், மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான தொகையை அதிகரிக்கவும், மத்திய அரசு வழங்கும் தமிழ் நாட்டிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் சம நீதியோடு திட்டங்கள் கிடைக்கவும் வலியுறுத்தல்.

* நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்கிட வலியுறுத்தல்.
* மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை.
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
* பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை மத்திய அரசின் மூலமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தல்.
* காவிரி – குண்டாறு – வைகை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கை.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தல்.

* நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை.
* டெல்டா கால்வாய்களில் கான்கிரீட் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்.
* பாண்டியாறு – புன்னம்புழா திட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்திட உரிய நடவடிக்கை.
* சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்கும் திட்டம்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு மாற்றுத் தேர்வு முறை. நீட்டுக்கு மாற்றாக +2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை முறை.

* மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, தேசிய அளவில் ஓர் இயக்கமாகவே செயல்படுத்த நடவடிக்கை.
* குடிமராமத்து திட்டத்தை தேசிய திட்டமாக நாடு முழுவதும் செயல்படுத்த வலியுறுத்தல்.
* உச்சநீதிமன்றத்தில் கச்சத் தீவை மீட்க தொடரப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வலியுறுத்தல்.
* தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் உள்ளடங்கிய கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தல்.
* இதர பிற்பட்ட வகுப்பினரில் மேல் நிலையினர் எனப்படும் கிரிமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வலியுறுத்துதல்.
* உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை.
* நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கென்று தனி பாதை அமைக்க வலியுறுத்தல்.
* மருத்துவ பணியாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க முயற்சி.

சாயப் பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண “ஹைடெக் சுத்திகரிப்பு’’ நிலையங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.

* வக்ஃப் வாரியம் பாதுகாக்கப்படும். இஸ்லாமிய சமுதாயத்தின் நியாயமான கோரிக்கையின் பக்கம் அரணாக நிற்கும்.
* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட நலவாரியம்.
* வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று, ஆபத்தான சூழலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* பழங்குடியினருக்கு சாலை வசதி – “ஏகலைவா’’ பள்ளி வசதி செய்துதர நடவடிக்கை.
* சிறு, குறு நடுத்தர தொழில் மேம்பாடுபெற மின்சார மானியம், கடன் வசதி, நிலுவை கடன் தவணைக்கு கால அவகாசம், வரி குறைப்பு நடவடிக்கை.

விவசாயத்தை உயிர்நாடியாக காக்கும் வகையில், தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதல், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விதை உற்பத்தி மானியம், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 6,000த்தை ரூ. 12,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை உள்ளிட்டவை.

* நிபந்தனையின்றி மாநில அரசுகள் கடன்கள் பெற மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்க வலியுறுத்தல்.
* இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை.
* பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க வலியுறுத்தல்
* ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகளை விலையில்லாமல் அளிக்க வலியுறுத்தல்.
* போதைப் பொருள் கடத்திய திமுக நிர்வாகிகள் மீது, சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை.
* நெகிழிப் பொருட்களுக்கான நிரந்தர தடை.
* சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டம்.

மத்திய – மாநில அரசுகளிடையேயான நிதி பகிர்வு சமநிலையில் இருக்கவும் 2026-க்கு பிறகு பொருட்கள் மற்றும் சேவை வரியோடு செஸ் வரியை இணைக்கவும் வலியுறுத்தல்.

* விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்.
* தடையில்லா மும்முனை மின்சாரம்.
* கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம்.
* மாநிலங்களுக்கு இடையேயான தேசிய வளர்ச்சி ஆணையத்தை செயல்படுத்துதல்
* தமிழகத்தில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையம்.
* நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்றுதல்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை.

* தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் விரிவாக்கம்.
* மகளிர் உரிமைத் தொகை: ஒவ்வொரு ஏழை குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ. 3,000.
* இலவச வீட்டு மனை மற்றும் வீடு கட்டும் திட்டம்.
* கிராம பொருளாதாரம் மேம்பாட்டு திட்டம்.
* கிராமப்புற இளைஞர்களுக்கு சர்வதேச அளவிளான விளையாட்டு பயிற்சி மையம்.

இளைஞர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம், திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை; வேலைக்கு ஏற்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை.

* மீனவர்கள் எளிதாக கடன் பெற மீனவர்களுக்கென்று பிரத்யேக வங்கிகள், மீனவர்களுக்கு பிரத்யேகமாக இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை.
* பழனி-கொடைக்கானல் ரோப்கார் அமைத்தல், கும்பகோணத்தை ஆன்மிக சுற்றுலா மையமாக மேம்படுத்துதல்.
* மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதார உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 5,000/- வழங்குவதற்கு நடவடிக்கை.
* சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகை மத்திய அரசால் முழுமையாக வழங்கவும், அப்பெற்றோரின் ஆண்டு உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தவும் வலியுறுத்தல்.
* மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்திற்கு உறுதி அளித்தல், உதவித் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை.
* ரயில் சேவை கூடுதல் வழித்தடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுப்போம் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
Share on:

விஜயபாஸ்கர் வீடு, ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் ஜி ஸ்கொயர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சற்றுமுன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் புதுக்கோட்டை இலுப்பூர் என்ற பகுதியில் உள்ள அவரது வீட்டில் மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய பத்து இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருவதாகவும் சென்னை அண்ணாநகர், எழும்பூர், நீலாங்கரை, அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளின் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது என்றும் அதேபோல் சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய இடங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் தற்போது அறிவித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அக்கட்சித் தலைவர் நெல்லை முபாரக் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. எஸ்டிபிஐக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

வடசென்னை – ராயபுரம் மனோ
தென்சென்னை – ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் – சந்திரஹாசன்
நாகை – சுர்ஜித் சங்கர்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தேமுதிக-க்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தேமுதிக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி தேமுதிகவிற்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி அல்லது மயிலாடுதுறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மேலும் தேமுதிக தரப்பில் ராஜ்யசபாவில் ஒரு இடம் வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகவும் இதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Share on:

மோடியின் கோவை ‘ரோடு ஷோ’வில் நிறுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் – நடவடிக்கை என்ன?


கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியின்போது பள்ளி மாணவர்களை பங்கேற்று நிற்கவைத்த அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர் புனிதா உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் சேலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ. தொலைவு வாகன பேரணி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். அதேவேளையில், பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், “கோவையில் பிரதமர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும். குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரான என புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய் பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட கல்வி அலுவலர் புனிதா இன்று பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பள்ளி மாணவர்களை பிரதமரின் வாகன பேரணியில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பள்ளி குழந்தைகளை வாகன பேரணிக்கு அழைத்து சென்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தது குறித்து பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் பதில் குறித்த அறிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.
Share on:

களைகட்ட போகும் மக்களவைத் தேர்தல்.. நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள்


மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துளார்.தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான்.

தேர்தலை திருவிழா போல நடத்துவது நமது நாட்டில்தான். லோக்சபா தேர்தலுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. ஒவ்வொரு தேர்தலும் எங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக உள்ளது . தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கேற்க வேண்டும்.

லோக்சபா தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்படும். 1.50 கோடி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளார்கள். இந்த மக்களவை தேர்தலில் 1.82 கோடி வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்கிறார்கள். அவர்களில் 82 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள்.

இந்த தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 49,72,31,994, பெண் வாக்காளர்கள் 47,15,41, 888, மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,055 பேர் உள்ளனர். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
Share on:

எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்? – தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வரவுள்ள நிலையில் இப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. இருப்பினும், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் சேர்த்து இடம்பெறவில்லை.

தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்று கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கிய தேதி வாரியாக இடம்பெற்றுள்ள இன்னொரு பட்டியலில் பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், லக்ஷ்மி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், கெவென்டர், சுலா ஒயின், வெல்ஸ்பன் மற்றும் சன் பார்மா ஆகிய எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெற தேவையில்லை.

தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட 22,217 தேர்தல் பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது. 2019 முதல்வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. இதற்கு ஜூன் 30 வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது.

கடந்த 11-ம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐயின் கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்ததோடு, தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதேவேளையில், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணைய தளத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, எஸ்பிஐ சமர்ப்பித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Share on:

“தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியீடு”: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்


தேர்தல் பத்திர தரவுகள் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம்” என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் வரும் லோக்சபா தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு உறுதி செய்யப்படும். அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் 6.9 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.100வயதுக்கும் மேற்பட்டோர் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும். ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படும். லோக்சபா தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இறுதியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை நடத்த முழுமையான அளவில் தயாராக உள்ளோம். போதைப்பொருள் உள்ளிட்டவைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனநாயக திருவிழாவில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share on:

சரத்குமாரின் முடிவிற்கு எதிராக கொந்தளித்த சமக தொண்டர்!


பாஜகவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் சரத்குமாரின் முடிவிற்கு எதிராக விழா மேடையிலேயே சமக தொண்டர் ஒருவர், கொந்தளித்தார்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடப்போகிறது.. அனேகமாக இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. பாமக, தேமுதிக இணையுமா இல்லையா என்பது இன்னமும் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை இணைந்துள்ளன.

பொதுவாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது வழக்கம்.. இந்த தேர்தலில் வித்தியாசமாக சிறிய கட்சி ஒன்று பெரிய கட்சி உடன் இணைந்துள்ளது. கூட்டணியாக அல்ல.. கட்சி அப்படியே பாஜகவில் இணைந்துள்ளது. சமீபகாலத்தில் நடந்த பெரிய மாற்றம் இதுதான்..

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இன்று இணைத்தார். லோக்சபா தேர்தல் நேரத்தில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்திருப்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு மத்தியில் ஒரு சமக தொண்டர் எழுந்து, நாட்டாமை தீர்ப்பை மாற்றுங்க என்பது போல், கொந்தளித்தார். பாஜகவில் சமகவை இணைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கொந்தளித்து கோஷம் போட்டதை கண்ட மற்ற தொண்டர்கள் இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்வி எழுப்பி அவருடன் வாக்குவாதம் செய்தனர்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
Share on:

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.


சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை சேர்ந்த செல்வராஜ், அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர், காலை 7.30 மணி முதல் சோதனையிட்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரிலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவை தவிர, சென்னை வேப்பேரி, பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை என சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Share on: