அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும் மக்கள் நம்பவில்லை!


பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதை தமிழ்நாடு மக்கள் ஏன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை? என்பது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “எடப்பாடி – பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதை தமிழக மக்கள் ஏன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை?

பாஜக எதிர்ப்பு வாக்குகள் என்பது சிறுபான்மை வாக்குகள் மட்டும் அல்ல சிறுபான்மையை தாண்டி அனைத்து மட்டங்களிலும் உள்ளது. ஆனால் EPS சிறுபான்மையினர் மட்டும் தான் பாஜகவிற்கு எதிரானவர்கள் என்று நம்புகிறார். அந்த பெரும்பான்மை பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக அறுவடை செய்கிறது. அதை அதிமுக பக்கம் இழுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்க வில்லை.

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கைகளுக்கு கவர்னர் மூலம் அனுமதி அளிக்க காலதாமதம் செய்வதும், மத்திய பாஜக திமுக மீது மட்டும் நடவடிக்கை எடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் ஒரு சந்தேக பார்வையை மக்களிடம் ஏற்படுத்துகிறது.

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் பாஜகவை எதிர்த்து அதிமுக அரசியல் செய்ய வேண்டும் என்கிற கருத்தை 2018-ல் தெரிவித்தார் அதற்காக இபிஎஸ் அவரை கட்சியை விட்டு நீக்கினார். ஆனால் கேசிபி இன்றுவரை தொடர்ந்து பாஜக எதிர்ப்பு நிலையில் பயணித்து வருகிறார். ஆனால் இதுவரை அவருடன் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. உண்மையிலேயே இபிஎஸ் பாஜக எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருந்தால் கேசிபியுடன் இணைந்து பயணிக்கலாமே.

இபிஎஸ்- இன் கடந்த கால வரலாறுகளை பார்த்து அவரை நம்பகத்தன்மை வாய்ந்தவராக பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.கொள்கை சார்ந்த சித்தாந்த அரசியல் செய்வதற்கு பதிலாக சாதிய அரசியல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் மீது வலிமையாக இருக்கிறது.

ஒன்றுபட்டு வலிமையான அதிமுக-வை கட்டமைத்து பலரும் கூட்டணிக்கு ஆர்வமாக நாடிவருவதற்கு கட்சியை போதுமான அளவு வேகமான கள அரசியலுக்கு அதிமுக தயார்படுத்த படாமல் பாஜக VS திமுக (இந்துத்துவா VS திராவிடம்) என்கிற சித்தாந்த அரசியல் கட்டமைக்கப்படுகிறது.இதை உணர்ந்து செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி?” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Share on: