அமர் பிரசாத் ரெட்டி & கோவுக்கு 12 ஆயிரம் ‘பெனால்டி’!


அண்ணாமலை வீட்டுக்கு அருகே பாஜகவினர் அமைத்த கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் 12,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
பாஜக கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர்
இந்த நிலையில், கொடிக் கம்பம் சேதப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவரது ஜாமீன் மனுவில் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டிருந்தார். இந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் ஆஜராகி, அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் வைத்துள்ளனர்
சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் தலா 2,000 ரூபாய் வழங்க வேண்டும், மேலும், 2 வாரங்களுக்கு காலை, மாலை என 2 நேரங்களும் கானாத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து, அவர்கள் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் 55 அடி உயரக் கம்பத்தில் கொடி கண்ணுக்கு தெரியாது. காக்கா, குருவி உட்கார மட்டுமே அந்தக் கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதித்து அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
Share on: