இவருக்கு பதிலாக இவர்! நெல்லை வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்!


நெல்லை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து வியாழன் அன்று, மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இறுதி பட்டியலாக அதிமுக அறிவித்தது. அதில் நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிம்லா முத்துச்சோழன் திமுகவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதிருப்தியால் கடந்த மார்ச் முதல் வாரத்தில் தான் அதிமுகவில் இணைந்தார்.திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். வழக்கறிஞராக உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். ஜெயலலிதாவை எதிர்த்து நின்று தோற்ற சிம்லாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக சார்பில் உறுதியளித்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியது.

இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சீட் தரப்படும் என உறுதி அளித்த நிலையிலேயே அவர் அதிமுகவில் இணைந்திருந்தார். அதன்படியே, எடப்பாடி பழனிசாமியும், சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை லோக்சபா தொகுதியில் சீட் வழங்கினார்.

ஆனால், சிம்லா முத்துச்சோழன் நெல்லை தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுகவில் பெரும் அதிருப்தி கிளம்பியது. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருப்பது அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் வரை இந்த அதிருப்தி எதிரொலித்தது.

இந்நிலையில், சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணியை நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நெல்லை புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும், திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் ஜான்சி ராணி உள்ளார்.

அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on: