வடசென்னை அலுவலகத்தில் என்ன நடந்தது? ஜெயக்குமார் – சேகர்பாபு பரபர பேட்டி.


வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் திமுக அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவை கண்டித்து அதிமுகவினர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி ஜெயக்குமார், சேகர்பாபு பேட்டியளித்துள்ளனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி இன்று மதிய வேளையில், அதிமுக சார்பில் வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் மனோ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதேபோல், திமுக சார்பில் வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் வந்திருந்தார். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளனர்.

இதனால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்று வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், திமுகவின் அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முதலில் வந்தது அதிமுகதான் என தேர்தல் அதிகாரி கூறியும் சேகர் பாபு ஏற்க மறுத்து வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்தார். இதனால், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது. சுமார் 45 நிமிடமாக இந்த வாக்குவாதம் நீடித்தது. இதன் பின்னர் திமுகவை கண்டித்து அதிமுகவின் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “முதலில் அலுவலகத்திற்கு வந்தது நாங்கள் தான். நான் தான் முதலில் வந்தேன். அப்போது வேட்பாளர் வரவில்லை என்று என்னை வெயிட் பண்ண சொன்னார்கள். 4 நிமிடம் கழித்து மனோ வந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றோம். ஆனால் அங்கே எங்களுக்கு முன்பு 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துகொண்டு இருந்தார்கள்.

நாங்கள் வெளியே வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென திமுகவினர் திபுதிபுவென உள்ளே வந்துட்டாங்க.. வேக வேகமாக உள்ளே சென்று முன் வரிசையில் போய் உட்கார்ந்து விட்டார்கள். திரைப்படத்தில் பார்ப்பதுபோல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் திமுகவினர் திபுதிபுவென வந்தனர். வேட்புமனு தாக்கலின் போது திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

எங்களுக்கு 7 ஆம் நம்பர் டோக்கன் கொடுத்தனர். அவரது பினாமி தான் 2 ம் நம்பர் டோக்கன் வாங்கியிருந்தனர். திமுகவும் பினாமி. வேட்பாளரிலும் பினாமி தான். 8 ம் நம்பர் டோக்கனில் தான் அவர்கள் 2வது டோக்கன் வாங்கினர். இது தொடர்பாக தேர்தல் அலுவலரே சொல்கிறார் அதிமுகவினர் தான் முதலில் வந்தனர் என்று. அதிமுக தான் முதலில் வந்ததாக கூறிய தேர்தல் அலுவலர்களையும் திமுகவினர் மிரட்டினர். அதிமுக சார்பில் 5 பேர் தான் உள்ளே சென்றோம். ஆனால் திமுகவின் தரப்பில் இருந்து 8 பேர் உள்ளே வந்தனர்” என்றார்.

இதற்கிடையே அமைச்சர் சேகர்பாபு, திமுக வேட்பாளர் தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டோக்கனை பெற்றதாக கூறினார். சேகர்பாபு கூறியதாவது:- அவதூறு வார்த்தைகளை அதிமுகவினர் தேர்தல் அலுவலர் முன்பே பேசினர். கலாநிதி வீராசாமியின் மாற்று வேட்பாளரான ஜெயந்தி கலா அவர்கள் காலை 9 மணிக்கே வேட்பு மனுவிற்கான டோக்கனை பெற்றுவிட்டார். இந்த பிரச்சினையால் அவரை திரும்ப அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும், ஒட்டுமொத்தமாக எப்படி சொன்னாலும் சரி வென்றது உதயசூரியன் தான். டம்மி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தான் அதிமுக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இப்படி நாள்பட நாள்பட தோல்வி பயத்தால் இப்படி கட்டவிழ்த்து விடுவார்கள்.

பால் கனகராஜ் உள்ளே இல்லவே இல்லை. அவர் தோல்வி பயத்தால் எதை எதையோ பேசுகிறார். தேர்தல் அதிகாரியை மிரட்ட வேண்டிய வேலை என்ன இருக்கு சொல்லுங்க? இங்கே என்ன வாக்குப்பதிவா நடக்கிறது. எதையாவது ஒன்றை கற்பனையாக ஜோடித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்கள். தேர்தல் நடக்கும் வரை இப்படி தான் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்கள். இவ்வாறு சேகர்பாபு கூறினார். முன்னதாக இருவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டனர்.
Share on: