ஊழல் வழக்கால் MLA, பதவியை இழக்கிறாரா அமைச்சர் பொன்முடி?


திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம்.

ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது? அவர் அமைச்சராக தொடர முடியுமா?

கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,விற்கான தகுதியை இழக்கிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
Share on: