அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. சொத்துக்குவித்தது உறுதி.. 21ல் தண்டனை.. ஹைகோர்ட் அதிரடி!


சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 21ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் எனவும் ஹைகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து, மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவியை விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்துள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆக.10-ல் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதி தனது விளக்கத்தை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்கக் கோரி பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்க உத்தரவிட்டார். அதேபோல, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவில், வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் நிர்வாக ரீதியில் எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரியும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க கோரியும் பொன்முடி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தலைமைப் பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். அதேபோல, வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

அப்போது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு ஜூன் 6-ம் தேதி முதல் நேர்த்தியாக நகரத் தொடங்கியுள்ளது என்றும், ஜூன் 23-ல் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட 4 நாட்களில், ஜூன் 28-ல், 172 சாட்சிகள், 381 ஆவணங்களுடன் 226 பக்க தீர்ப்பில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டார். பொன்முடி 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறினார். தண்டனை விவரங்கள் வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்

அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Share on: