கையோடு வரும் புது சாலை.. கரூர் அவலம்!


கரூர் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை, போட்ட உடனே கையோடு பெயர்த்து வரும் வகையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை குறித்து அப்பகுதி மக்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இருந்த சாலை சேதமடைந்திருந்த நிலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டார். சுமார் 4 கிலோமீட்டர் தார் சாலை அமைக்க ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், முறையாக தரமாக தார்ச்சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார்ச் சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள், ரோட்டை கையால் அள்ளிக் காட்டி வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மறு ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on: