தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் கல்வெட்டு புறக்கணிப்பு!


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் கல்வெட்டுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன

கோவை தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சரஸ்வதி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அரசு பாடலாக பிரகடனம் செய்திருந்தும் இந்த நிகழ்ச்சியில் அப்பாடல் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டது. வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கல்வெட்டுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த கல்வெட்டுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளையில் தமிழ் கல்வெட்டு வைக்கப்படவில்லை. இது சர்ச்சையாக வெடித்தது. கடந்த ஆண்டும் கோவை நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், வங்கியில் கல்வெட்டுகளைத் திறந்து வைத்த உடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அதிகாரிகளை அழைத்து எந்த ஊரில் நீங்கள் கிளைகள் திறந்தாலும் அந்த ஊர் மொழியில் கல்வெட்டுகள் வைக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் முன்னிலையிதான் கூறினார்.

கல்லூரியின் நிகழ்ச்சி நிரல் எனக்கு முன்னரே தெரியாது. நிகழ்ச்சி தொடங்கிய பின்னர்தான் எங்களுக்கு தெரியும். நிகழ்ச்சியில் நேரடியாக கலந்ததால் ஒருவேளை எனக்கு டக்கென தோணலை. நீங்க சொன்னதுக்கு பிறகுதான் தோணுது.. ஏனெனில் நிறைய புரோகிராம் காலையில் இருந்து..எந்த புரோகிராமில் என்ன பாடினாங்கன்னு கொஞ்சம் தெரியலை என்றார்.
Share on: