திருநெல்வேலி சீமையையே அதிரவைத்த 93 செமீ மழை. சென்னை கவனிக்க வேண்டிய முக்கியமான பாடம்.


ஒரே நாளில் 40, 50, 60, 90 செமீ என திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதனால் ஆறு குளங்களில் அளவுக்கு மீறி வந்த வெள்ளம் ஊருக்குள் வெளியேறியது.. ஆனால் சென்னையில் நடந்தது அப்படி அல்ல.. ஏனெனில் சென்னை சில பகுதிகள் ஆற்றிலும்,. ஏரியிலும் தான் இருகின்றன. எனவே சென்னை கற்க வேண்டிய முக்கியமான பாடத்தை பார்ப்போம்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 2,3, 4 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. சென்னையில் தொடர்ந்து 36 மணி நேரம் மழை பெய்த காரணத்தால், சென்னை மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம், அளவுக்கு மீறி பெய்த மழை. அந்த தண்ணீர் வெளியேற தேவையான வடிகால்கள் இல்லாதது தான்.

முதல் பிரச்சனையான அளவுக்கு மீறி பெய்த மழையை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் இரண்டாவது காரணமாக தண்ணீர் வடிய போதிய கால்வாய்கள் பிரச்சனையை சரி செய்ய முடியும். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் சென்னை அதிகப்படியான ஏரி நிலங்களை இழந்துள்ளது. ஏன் சில ஏரிகளே காணாமல் போய்விட்டன. 800களில் இருந்த வேளச்சேரி ஏரியின் பரப்பளவை இப்போது ஒப்பீட்டால் உண்மை நிலை தெரியும்.

இதேபோல் பள்ளிக்கரணை ஏரியின் பரப்பளவை 1975களில் இருந்ததை இப்போது ஒப்பிட்டால் நிச்சம் அதிர்ந்து போவீர்கள். அந்த அளவிற்கு கபளீகரம் செய்துவிட்டனர். இதேபோல் சென்னையின் போரூர், முகபேரு, கோயம்பேடு, என பல ஏரிகள் வளர்ச்சி என்ற பெயரில் சுருங்கி உள்ளன.

முன்பெல்லாம் மழை என்பது பரவலாக பெய்யும். இப்போது அப்படி அல்ல.. ஒரே நாளில் 40, 50, 60, 90 செமீ என மழை பெய்கிறது. இப்போது சொன்ன மழை அளவு திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துள்ளது. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறு மற்றும் குளங்களில் அளவுக்கு மீறி வந்த வெள்ளம் ஊருக்குள் வெளியேறியதால் பாதிப்புஅதிகமாக உள்ளது. அதேநேரம் கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்படவில்லை. மிகச்சிறிய அளவில் தான் அங்கு தண்ணீர் கரையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுதவிர கடல் மட்டத்தில் இருந்து நல்ல உயரத்தில் உள்ளன. இதனால் கண்டிப்பாக என்ன மழை பெய்தாலும் உடனே கடலில் ஓடிப்போய் கலந்துவிடும்.

ஆனால் ஒரே நாளில் 40, 50, 60, 90 செமீ பெய்தால் சென்னை கண்டிப்பாக தாங்காது. சென்னையின் வடிகால் அமைப்புகள் நிச்சயம் இவ்வளவு மழையை தாங்கும் அளவிற்கு கிடையாது. மற்ற ஊர்களில் இவ்வளவு மழை பெய்தால் ஆறுகள், குளங்கள் உள்ள பகுதிளில் தான் வெள்ளம் பாயும். ஆனால் சென்னையில் மழை பெய்தால் , சென்னை முழுவதும் காட்டாறு போல் தான் தண்ணீர்போகும். எனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விஷயத்தில் அரசு திடமான முடிவெடுக்க வேண்டும். முதலில் மிக ஆபத்தான நீரின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். ஏனெனில் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட, கீழ்கட்டளை முதல் பள்ளிக்கரணை வரை உள்ள மோசமான ஆக்கிரமிப்புகள் காரணம் ஆகும்.

ஏரியின் போக்கையே மாற்றும் வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.அவற்றை எல்லாம் அகற்றி தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஆழப்படுத்தி, தடுப்பு சுவர்களை எழுப்பி வைக்க வேண்டும். அந்த தடுப்பு சுவர்கள் மழைக்கு தாங்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் ஓரளவு தப்பிக்க முடியும். மழை நீர் வெளியேறும் பகுதிகளில் குடியிருப்போருக்கு மட்டுமல்ல, அந்த ஆக்கிரமிப்புகளால் பலர் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

சென்னையில் நீர் நிலைகளில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த நீர் நிலை மற்றும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுவது தான் எதிர்காலத்தில் சென்னையை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் இனி வரும் காலங்களிலும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இதேபோல் சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்து நேரடியாக வெள்ள நீர் கடலில் கலக்க புதிய நீர் வழிப்பாதை திட்டத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் சென்னையின் பாதிப்பு ஓரளவு குறையும் வாய்ப்பு உள்ளது.
Share on: