தேர்தல் விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலையொட்டி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது . இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

17வது லோக்சபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெற போகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு லோக்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற போகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்களே வாரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அனலுக்கும் வெயிலுக்கு நடுவே பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது.. ஒருபக்கம் வேட்பாளர்கள் செலவு செய்ய பணத்தை ரொக்கமாக கொண்டு செல்வார்கள் என்ற சந்தேகத்தில் மாநிலம் முழுவதும் பறக்கும்படை தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 50000 பணத்தை தாண்டி எடுத்த சென்றால், செங்கல்பட்டை கூட தாண்ட முடியாத அளவிற்கு கடுமையான சோதனைகள் நடக்கிறது. எல்லா மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பல கோடி பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் தினமும் கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

தேர்தல் விதிமுறை என்ன: ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலம் வரை ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.. அந்த வகையில் இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share on: