கோவையில் பிரபல மருத்துவமனையில் நடந்த ஐடி ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்?


கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் ஐடி ரெய்டு நடந்தது.. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தொகுதிகளல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் தென்காசி, திருப்பூர், செய்யாறு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், பணம் பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறையினர் நேற்று மீண்டும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்..

இந்நிலையில் கோவையில் ஒரே குழுமத்தின் மருத்துவமனைகள் சரவணம்பட்டி மற்றும் சிங்கநல்லூரில் செயல்படுகிறது. இதேபோல் மதுக்கரையில் செட்டிபாளையம் பிரிவில் இந்த குழுமத்திற்கு நர்சிங் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் ஏராளமான பணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த மருத்துவமனை உரிமையாளரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை குழும்மத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுக்கட்டமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விவரங்களை வெளியிடவில்லை.. இதுகுறித்து வருமான வரித்துறையிடம் தேர்தல் ஆணையம் பல்வேறு விவரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share on: