பாஜக கூட்டணி முறிவு? அண்ணாமலைக்கு எதிராக 2-வது தீர்மானம்?


பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நாளை நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்மையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சித்திருந்தது பெரும் பிரச்சனையை உருவாக்கியது.

சென்னையில் ஜூன் 13-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அண்ணா குறித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை பதில் கொடுத்தார். இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; பாஜக ஒரு வேஸ்ட் லக்கேஸ்; பாஜகவால் நோட்டாவை கூட தாண்ட முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்லூர் ராஜூ ஒரு பேட்டி அளித்தார். மத்தியில் பிரதமராக மோடிக்கு அதிமுக ஆதரவு தருகிறது; தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜக ஆதரவு தராது என அண்ணாமலை மீண்டும் கொடி பிடித்தார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தனர் அதிமுக தலைவர்கள். ஆனால் அதிமுக தலைவர்களை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்பட்டது

சென்னையில் நாளை மீண்டும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். சென்னையில் நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்ளக் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலையை மாற்றினால்தான் பாஜகவுடன் கூட்டணி என்கிற வகையிலான நிபந்தனை தீர்மானம் நிறைவேற்றப்படவும் சாத்தியம் இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
Share on: