பாஜகவுடன் மோதல்: டெல்லிக்கு படையெடுத்த 5 அதிமுக ‘தலை’கள்!


சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் 5 தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த இந்த 5 தலைவர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கேசி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணியில் பெரும் பிரளயத்தை உருவாக்கிவிட்டது. அண்ணாமலைக்கு ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சிவி சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கும் அண்ணாமலை அசராமல் பதில் கொடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, பாஜக எங்கள் கூட்டணியிலேயே இல்லை என அறிவித்தது. அப்போதும் அண்ணாமலை பிடிகொடுக்காமல் பதிலடி தந்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் செல்லூர் ராஜூ மூலமாக, அதிமுக சமாதனம் செய்ய முயற்சித்தது. பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடி பழனிசாமி என்கிற முழக்கத்தை செல்லூர் ராஜூ முன்வைத்தார். அதெல்லாம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜக ஆதரிக்காது என அப்போது பதில் தந்தார் அண்ணாமலை.

இதனால் கடுப்பாகிப் போன அதிமுக டெல்லியிடம் பஞ்சாயத்து செய்ய முடிவெடுத்தது. இதனால் அதிமுகவின் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, சிவி சண்முகம் என ஐந்து தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்திப்பது இவர்களது திட்டம். ஆனால் அமித்ஷா, அதிமுக தலைவர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் ஜேபி நட்டாவை மட்டும் நேற்று இரவு அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.

அதிமுக தலைவர்களின் டெல்லி பயணத்தை கேசி பழனிசாமி தமது சமூக வலைதளப் பக்கங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் கேசி பழனிசாமி கூறியிருப்பதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் டில்லியில் முகாம்.அமித்ஷாவை சந்திக்க காத்திருக்கிறார்கள்.

அதிமுக என்பது தனித்துவம்வாய்ந்த ஆளுமைமிக்க தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. வீராவேசமாக கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு பின்னர் எடப்பாடியை முதல்வராக அறிவிக்கவேண்டுமென்று செல்லூர் ராஜு மூலமாக கோரிக்கை வைத்து அதற்கு அண்ணாமலை பாராளுமன்றத்திற்கு உங்களை பயன்படுத்திக்கொள்வோம்; சட்டமன்றத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் அறிவித்த பிறகு டெல்லிக்கு காவடி தூக்கும் நவீன தரகர்கள்.

இவர்கள் ஐவரும் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை மீண்டும் பாஜகவிடம் அடகுவைக்க காத்திருக்கிறார்கள். ஆனால் தன்மானமிக்க அதிமுக தொண்டர்கள் இதை ஏற்கமாட்டார்கள் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் படுதோல்வி அடையச்செய்வார்கள். இவ்வாறு கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Share on: