பிடி கொடுக்காத அதிமுக.. அடுத்து என்ன? அமித்ஷா, ஜேபி நட்டாவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

டெல்லி: பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. வரும் 2024 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்தது. அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும் இதற்கு அதிமுக பிடி கொடுக்க மறுப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிமுக குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டார். டெல்லி செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணமாலை, தமிழக பாஜக தலைவர் என்பது வெங்காயம் போன்றது என பரபரப்பாக பேட்டி அளித்தார். மேலும், நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே டெல்லி செல்வதாகவும் கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் கட்சி மேலிடம் கேட்கவில்லை.

இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது என்று கூறினார். டெல்லி சென்ற அண்ணாமலை நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை முதலில் சந்தித்துள்ளார். இரவு 8 மணியளவில் ஜேபி நட்டாவுடன் ஆலோசனை மேற்கொண்ட அண்ணாமலை, இரவு 10.30 மணியளவில் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், தனது பாஜகவின் மேலிட தலைவர்களுடனான சந்திப்பின் போது கூட்டணி விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

Share on: