முஸ்லிம் வாக்குகளை அதிமுக மீண்டும் பெறுவது எப்படி?


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இறுக்கமான நெருக்கத்தில் இருந்தது அதிமுக. பாஜகவின் இன்னொரு கிளை அமைப்பு போலத்தான் அதிமுக செயல்பட்டு வந்தது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.

அதிமுகவுக்குள் பிரச்சனை என்றால் ஏதோ ஒரு மாநில பிரிவு போல டெல்லி பாஜக தலைமையிடம் போய் புகார் சொல்லி தீர்வுக்கு காத்திருக்கிற நிலைமையில்தான் அக்கட்சித் தலைவர்கள் இருந்தனர் என்பதும் கடந்த கால வரலாறு.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என தமிழாடு பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியதுதான் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது. பெரும் போராட்டத்துக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைபற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவின் இந்த நிலைப்பாடு கொஞ்சமும் சகிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனால் இனியும் பாஜகவின் கூட்டணி தேவையே இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டது அதிமுக.

2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களை பாஜகவுடன் இணைந்தே அதிமுக சந்தித்தது. இதனால் இயல்பாகவே இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிமுகவுக்கு கொஞ்சமும் கூட விழவில்லை. இப்போது பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஆனாலும் இஸ்லாமியர்களை உடனே அதிமுக பக்கம் திருப்பிவிட முடியாது.

அதிமுக ஆதரவு முஸ்லிம் கட்சிகள் எண்ணிக்கையை கிடுகிடுவென அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாம். குறிப்பாக இஸ்லாமிய சிறைக் கைதிகள் விவகாரத்தை முன்வைத்து திமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ப்ளான் போடுகிறதாம் அதிமுக. அப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் போது கணிசமான முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் தம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆபரேஷன் “M” என்று சொல்லுமளவிற்கு முஸ்லிம்களை டார்கெட் செய்து படுவேகமாக காய் நகர்த்துகிறதாம் அதிமுக.
Share on: