கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!


சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனக்கு களங்கம் விளைவிப்பதாக இருப்பதாக கூறி, அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமனத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து ஆதரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன் தெரிவித்தார்

இதையடுத்து, கேசி.பழனிசாமி வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Share on:

திடீர் IT Raid பின்னணியில் யார்!


சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. சௌகார்பேட்டையில் மருத்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. சவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மாதவரம் நடராஜன் நகரில் உள்ள தனியார் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தாம்பரம், குன்றத்தூர், எழும்பூர், மண்ணடி, தாம்பரம், வேப்பேரி, பூக்கடை, வேப்பேரி, வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்துவருவதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனம் தொடர்பான இடங்களிலும் வருமானவரி சோதனை நடக்கிறது.. இந்த சோதனைக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த சோதனையின் முடிவில்தான் அரசியல் காரணம் குறித்து தெரியவரும்.

இந்த சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. என்றாலும், விடிகாலையிலேயே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.
Share on:

10 வயது சிறுவனை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்!


பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவாரம் தொடர் சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்தார். ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சை பலளின்றி பலியானார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின வழிகாட்டுதலின் படி டெங்கு பரவலைக் குறைக்க எல்லா மாநிலங்களும் தீவிர நடிவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சக்தி சரவணன் என்ற 10 வயது சிறுவன் இன்று காலையில் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த அணுக்கள் குறைந்து வந்ததாக தெரிகிறது. ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் ஏற்கனவே 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
Share on:

சென்னிமலையில் பதற்றத்தை உண்டாக்கிய இந்த நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?


சென்னிமலை-யில் பதற்றத்தை உண்டாக்கிய நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஒரு மதவாத மோதலை திமுகவும்,பாஜக வும் திட்டமிட்டு அரங்கேற்றி கொங்குமண்டலத்தில் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளாக கொங்கு மக்களின் குலதெய்வமாக விளங்குகிற முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிற சென்னிமலை ஸ்தலத்திற்கு “கல்வாரி மலை என மாற்றம் செய்வோம்” என்று பகிரங்கமாக சவால் விட்டு பொது அமைதிக்கு களங்கம் விளைவித்த இந்த நபர் மீது முதலமைச்சர் திரு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவதன் காரணம் என்ன?
Share on:

தலித் இளைஞரை ஆபாசமாக திட்டியதால் சஸ்பெண்ட்


சேலம் அருகே கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதாக கூறி தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கி துரைமுருகன் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு உயர்சாதியினர் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த தடையை மீறி கோயிலுக்குள் சென்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அந்த பட்டியலின இளைஞரை சூழ்ந்த ஊர் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி. மாணிக்கம் பட்டியலின இளைஞரின் நெஞ்சை பிடித்து தள்ளினார். அத்துடன் அங்கு நின்றுகொண்டு இருந்த பட்டியலின இளைஞரின் தந்தையையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார்.

மேலும், அங்கு நின்ற தலித் மக்களை காட்டி, “இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோயிலுக்கே வர மாட்டேன் என்கிறான். கோயிலே வேண்டாம் என்கிறான். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன்.” என்றார்.

பட்டியலின இளைஞரை தகாத முறையில் திட்டிய சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி மாணிக்கத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி அறிவித்தார்.
Share on:

VAO-வை லாரி ஏற்றி கொல்ல முயன்றது திமுக நிர்வாகிகள்..


பழனி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளியதை தடுக்க முயன்ற விஏஓ மீது கொலை முயற்சி நடந்த நிலையில், திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், அங்கு மணல் அள்ளியவர்களிடம் ஆயக்குடி பகுதிக்கான பாஸ் எதுவும் இல்லாததும் வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குளத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் இருசக்கர வாகனங்கள் பின் தொடராத வண்ணம் ஜீப்பில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை முந்தவிடாமல் அவர்களை வலது புறமும், இடது புறமும் வாகனத்தை இயக்கி பின்னால் கதவை திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் விஏஓ மற்றும் உதவியாளரை கொல்ல முயன்ற புகாரில் திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஏஓ கருப்பசாமி, அவரது உதவியாளர் மகுடீஸ்வரன், இரு காவலர்கள் ஆகிய நால்வரை அவர்கள் மீது ஆற்று மணலைக் கொட்டியும், லாரியை ஏற்றியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது
Share on:

வரலாறுகளுக்குதானே விடை தெரியும்!


மகாராஷ்டிரா அரசியலில் யாரோ ஒருவர் உருவாக்கிய கட்சியில் இணைந்து அதே கட்சியை கபளீகரமே செய்து கட்சி ஓனரையே கதறவிட்டவர் ஏக்நாத் ஷிண்டே. அதனால்தான் என்னவே மாமனார் உருவாக்கிய கட்சியை ஆட்டைய போட்ட ‘சந்திரபாபு’க்கள் மறக்கடிக்கப்பட்டு ‘ஏக்நாத் ஷிண்டே’க்கள் பெயர் அதீதமாக இந்திய அரசியல் அரங்கில் உச்சரிக்கப்படுகின்றன.

தமிழ்நாடுதான் என்றில்லை… அதிமுகதான் என்றில்லை.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஷிண்டேவை ‘டெல்லி’ சர்க்கார் “உற்பத்தி” செய்து கொண்டுதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் என்றில்லை.. மாநில கட்சிகள்தான் என்றில்லை.. மிசோரம் போன்ற குட்டி மாநிலங்களிலும் கூட எல்லை அருணாச்சல பிரதேசத்திலும் கூட ஷிண்டேக்கள் “உற்பத்தி” டெல்லியால் புற்றீசல் போல புறப்பாடு ஆகி கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாடு பாஜக தலைவருக்கும் ஒரு ஷிண்டே இருக்கிறார்தானே.. அதையேதான் ” அண்ணாமலைக்கு ‘ஆப்பு’- அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பெண் தலைவரின் ஸ்கெட்ச் நிறைவேறும்?” என நாமும் எழுதி இருந்தோம்.

“நாம நினைப்பது போல நாலு கூறாக இந்த “மா” நிலம் பிளவுபடாமலா போகும்? நமக்கும் ஒரு நாள் நாற்காலி வராமலா போகும்? சுழற்சி முறையில் மூவருமாய் மகுடம் சூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன முறை பிடியில் இருந்தவர்கள் 2026-ல் பின்வருவார்களா? புதிய முகங்களை வளைக்க முடியுமா? “முதலீடு” என்ன? “வருவாய்” என்ன? என்பதில்தான் ஷிண்டேக்கள் மூச்சுக்கு மூச்சு விவாதிக்கிறார்களாம்!
Share on:

தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!


தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கோவையிலும் உள்ள மார்ட்டின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை மார்ட்டினுக்குச் சொந்தமான 908 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலிருந்து நடைபெற்று வரும் சோனையில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார்களா?, வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

திமுக மாவட்ட நிர்வாகி பேச்சால் சர்ச்சை!


காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நாம் எதிர்ப்பது போல் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்றும் அப்போது தான் நம்மை மக்கள் நம்புவார்கள் எனவும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் மயிலாடுத்துறை மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேல்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. தனது ஆட்கள் மூலம் கூட்டத்தை முகநூலில் லைவ் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார். இது தெரியாமல் பேசிய திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேல், எடப்பாடி பழனிசாமியை மட்டம் தட்டி பேசணும், காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது போல் நடிக்கணும் எனக் கூறிவிட்டார். கர்நாடக காங்கிரஸை எதிர்ப்பது போல் ராஜ்குமார் எம்.எல்.ஏ. மாயையை உருவாக்கணும் என்று பாடமெல்லாம் எடுத்தார்.

திமுக நிர்வாகியின் இந்தப் பேச்சு காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. நேற்றுக் கூட சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்தச் சூழலிலும் காவிரி நீர் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் நிச்சயம் பெற்றுத் தருவோம் எனவும் உறுதிபடப் பேசியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் இவ்வாறான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் திமுக நிர்வாகி ஆர்வக்கோளாறில் தேவையற்றதை பேசி கட்சித் தலைமையை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டுள்ளார்.
Share on:

ஆ. ராசாவின் 15 சொத்துகளை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!


திமுக எம்பி ஆ ராசாவின் சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆ ராசாவின் பினாமி நிறுவனம் எனக்கூறி அதன் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி கையகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் திமுக எம்பி ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆ ராசாவின் பினாமி நிறுவனமான கருதப்படும் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது. இந்த சொத்துகள் அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருக்கிறது. ஆ ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் சோதனை நடத்தியது.

கோவை மாவட்டத்தில் ஆ ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அதாவது ஆ ராசா மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க வேண்டி பணம் வாங்கியதாகவும்,தனை அவர் பினாமி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: