ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்கள் நியமனம்!!தனியார்மயமாக்கப்படுகிறதா போக்குவரத்து துறை?….

ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் 400 ஒட்டுனர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு.

சென்னை,கும்பகோணம், திருச்சி உட்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கும் ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 18% ஜிஎஸ்டி வரியுடன் 533 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும்,12 மாத கால பணி அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஓட்டுநர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கும் நிலையில்,கடந்த மாதம் அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து டெண்டர் விட்டது.தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமனம் என தொடர்ந்து திமுக ஆட்சியில் அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு கொண்டே வருகின்றன.

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு “ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்”என்ற நிறுவனத்துக்கு அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் மூலம் தேர்வான ஓட்டுநர்கள் வரும் 15ஆம் தேதி முதல் பணியில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

நிரந்தரமான அரசு வேலைகள் என்பதை இனி மக்கள் எதிர்பார்த்துவிட முடியாது என்பதற்கு இதுவே சான்று. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து காலி இடங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையிலேயே, தற்காலிகமாக மக்களை பணியமர்த்தி வருவது ஒருபக்கம் உழைப்பு சுரண்டலையும்,மறுபக்கம் தகுதியில்லாத ஆட்களுக்கு பணி நியமனம் வழங்குவதை அரசு நேரடியாக செய்து வருகிறது.

போக்குவரத்து துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனங்கள் செய்யப்படும் என்று தெரிவித்த திமுக அரசு,பணி நியமனம் செய்யாமல், இருக்க கூடிய தொழிலாளர்களை வைத்தும்,ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமித்தும் போக்குவரத்துத்துறையை நடத்த முயற்சிப்பதை கைவிடக்கோரி பல்வேறு அரசு பேருந்து ஓட்டுநர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Share on: