அதிமுக பாஜக கூட்டணி முறிவால் சிக்கல்?


அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகிகள் பலரிடம் கருத்துகளைக் கேட்டு விரிவான ரிப்போர்ட்டை டெல்லி தலைமைக்கு சமர்ப்பித்துள்ளார் நிர்மலா.

பாஜக கூட்டணியில் இனி அதிமுக இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவறாக பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக தரப்பில் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றனர்.

அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி முறிவால், அடுத்தகட்ட பிளான் தொடர்பாக அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது

ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க அண்ணாமலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை சந்தித்து, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும், அதிமுக வெளியேறிய நிலையில், யாருடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பிறகு, அண்ணாமலை முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொள்வதால், அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது. அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன், டெல்லி மேலிட தலைவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரிடமும் கருத்துகளை கேட்டு அதனை நிர்மலா சீதாராமன் அறிக்கையாக தயார் செய்துள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு, பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி விரிவான அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Share on: