மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!


மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் (Rajya Sabha) நிறைவேற்றப்பட்டது.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை (செப்.21) நிறைவேறியது.

மாநிலங்களவை சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் பெரும்பான்மை வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 215 வாக்குகள் பதிவாகி இருந்தன.

எதிராக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி எட்டாவது திருத்தம்) மசோதா 2023 மீதான விவாதத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்த மசோதா நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்றார்.

தொடர்ந்து, “இது அனைத்து அரசியல் கட்சிகளின் நேர்மறையான சிந்தனையையும் காட்டுகிறது, இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய ஆற்றலைக் கொடுக்கும்” என்றார்.

முன்னதாக மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக AIMIM லிருந்து இரண்டு வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மேக்வால் தாக்கல் செய்தார். அப்போது மசோதா மீதான விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை அடையாளம் காண வெளிப்படையான செயல்முறை கடைப்பிடிக்கப்படும் என உறுதியளித்தார்.
Share on: