2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெரும் மத்திய அரசின் முடிவு! மக்களுக்கு உள்ள சாதகம் பாதகம் என்ன?

2,000 ரூபாய்த் தாளை மாற்ற வரும் ஒவ்வொருவரிடமும் ஆதார் அட்டையும், பான் அட்டையும் (PAN Card) வங்கியில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். அவற்றின் பிரதியை, மூலத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்த்த பின், வங்கியில் வைத்துக் கொள்வார்கள்.

தங்கள் வங்கிக் கணக்கில் பணமாகக் கட்டுபவர்களுடைய ஜாதகம் வங்கியில் ஏற்கனவே இருக்கும். உதாரணமாக, ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) என்கிற விதியின் படி, வங்கிக் கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

அடுத்தாக, ஒருவர் மாற்றுகிற 2,000 ரூபாய்த் தாளின் கூட்டு மதிப்பு (Cumulative Value) ரூ.50,000-ஐத் தாண்டினாலோ, கணக்கில் செலுத்தும் தொகையின் கூட்டு மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினாலோ, அவர்களுடைய விவரங்கள் வருமானவரித் துறைக்கு வங்கிகளின் கணினி வலைப்பின்னல் வாயிலாகத் தானாகவே போய்ச் சேர்ந்து விடும்.

உடனே களத்தில் இறங்கும் வருமானவரித் துறை அதிகாரிகள், பரிசீலனையில் இருக்கும் நபர்களின் கடந்த 3 வருட வருமானவரிக் கணக்கு, வங்கிக் கணக்கில் கடந்த ஓராண்டில் வந்துள்ள வரவுகளின் கூட்டுத் தொகை (Credit Summation) ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இவை அனைத்தையும் மனிதர்கள் குறுக்கீடு இல்லாமல் கணினிகளே செய்து விடும். அதற்காகச் சிறப்புடன் செயலாற்றும் மென்பொருள் (Software) 2017-ல் வந்து விட்டது.

அவசியம் ஏற்பட்டால், மத்தியப் புலனாய்வு நிறுவனத்துக்கும் (CBI), மத்திய நிதித்துறையின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவுக்கும் (Financial Intelligence Unit) புள்ளிவிவரங்கள் அனுப்பப்பட்டு விடும்.
ஒருவருடைய ஆண்டு வருமானத்துக்கும், வங்கிக் கணக்கில் காணப்படும் மொத்த வரவுக்கும், அவர் 2,000 ரூபாய்த் தாளைக் கொண்டு வங்கிகளில் செய்த பரிவர்த்தனைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் (லட்சக் கணக்கில் அல்லது கோடிக் கணக்கில்) இருந்தால், அவர் தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்.

பல்முனை விசாரணைகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு அவருடைய பதில்கள் திருப்திகரமாக இல்லாமல் போனால், அவரிடம் இருந்து பன்மடங்கு அபராதத் தொகை, அதற்கான வட்டி ஆகியவை வசூலிக்கப்படும்.
தவிரவும், அவர் கட்டிய பணம் வந்த வழிக்கான (Source of Income) திருப்திகரமான விளக்கம் அவர் தரவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், கருப்புப் பணத்தை வெளுப்பாக்குவதற்கான தடைச் சட்டம் (Prevention of Money Laundering Act) பாயும். இதன் விதிகளும், அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையும் கடுமையானவை. அவற்றில் இருந்து எளிதில் தப்பிக்க இயலாதவை.

கடைசியாக ஒரு வேண்டுகோள் அல்லது எச்சரிக்கை.
இன்னொருவர் தரும் 2,000 ரூபாய்த் தாள்களை நீங்கள் வாங்கி மாற்றவோ, உங்கள் வங்கிக் கணக்கில் கட்டவோ வேண்டாம். அப்படிச் செய்தால், உங்களுக்கும் தண்டனை காத்திருக்கலாம்.

Share on: