நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என்கிற சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் இந்துத்துவா,திராவிடம் பாஜக vs திமுக என்று அமைக்கப்படுகிறது. அதிமுகவிற்கு இது மிக மிக ஆபத்தானது.
திமுக,பாஜக இரண்டுமே திட்டமிட்டு தமிழக அரசியல் களத்தை இதேபோல் அமைக்கிறார்கள்.இந்த நேரத்தில் அதிமுக நாடாளுமன்ற வெற்றியையும் தமிழகத்தை ஆளுகின்ற வாய்ப்பையும் பெற தன் பலத்தையும் தனித்தன்மையையும் நிரூபிக்க வேண்டும்.
அமைதியாக திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாமல் கொடநாடு கொலை வழக்கில் மூழ்கி இருப்பது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல வலிமையாக களத்தில் மக்கள் மனதில் ஆளுமைமிக்க இயக்கமாக உருவெடுக்க வேண்டும். – கே.சி.பழனிசாமி
நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.
படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த ஜெயஸ்ரீதான் நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார்.
ஜெயஸ்ரீ பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் முடித்தார். இதன்பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் விமானியாக முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார்.
ஜெயஸ்ரீ கூறுகையில், “எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தார்கள்.
வழக்கமான வேலைகளைவிட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநல பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் விமானியாக தொடர முடியாது. பணியை இழக்க வேண்டிய நிலை வரும்.
விமானியாக வர விரும்புவோருக்கு மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்ப கால பள்ளி படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களும் முக்கிய காரணம் என்று கூறுவேன். எங்கள் சமுதாயத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”
தன்னம்பிக்கையும், கல்வியும், பெற்றோரின் அன்பான ஆதரவும் பெண்களுக்கு இருந்தால் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும் என்பதற்கு விமானி ஜெயஸ்ரீ மிகச்சிறந்த உதாரணமாவார்.
மேட்டூர் அணையின் நீர் வரத்து 6,428 கன அடியில் இருந்து 3,535 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருவதால் ஆற்று நீரை நம்பி பாசனம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போனது. ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது.
நடப்பாண்டு தமிழ்நாட்டிற்குத் தேவையான காவிரி தண்ணீரை போராடியே பெற வேண்டியுள்ளது.
கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆற்று நீரை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை சரிவடைந்து வரும் நிலையில் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும். எனவே குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகிவிடும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு வரும் 9, 10 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அரிசியல் பிரபலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடாமல், பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷும் தனது எக்ஸ் பக்கத்தில் உண்மை என்று பதிவிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு இந்தியா என்று பெயர் உள்ளதாகவும், மாநிலங்களின் ஒன்றியம் என்பதும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பாரத குடியரசு என்று குறிப்பிட்டுள்ளதுடன், சுய விவரக்குறிப்பில் அசாமின் முதலமைச்சர், பாரத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆசிரியர் நாள் வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஆளுநர், தனது வாழ்த்தில் பாரதம் என்றே குறிப்பிட்டுள்ளார்.
வலிமை மற்றும் திறமை மிகு பாரதத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கியபங்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி கூட உள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயர் மாற்றத்துக்கான சட்ட முன்வடிவம் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். 47 வயதான இவர் அருகிலுள்ள பகுதியில் அரிசிக் கடை நடத்தி வந்தார். அவருக்கு அதே ஊரில் சொந்தமாக கிணறு ஒன்று உள்ளது. சம்பவம் நடந்த நேற்று இரவு சிலர் கிணற்றின் அருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த செந்தில்குமார் அவர்களிடம் சென்று, இங்கு ஏன் மது அருந்திக்கொண்டிருக்கிறீர்கள், வேறு எங்காவது சென்று குடிக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.
இதில் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. குடிபோதையில் இருந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த செந்தில் குமார் தம்பி மோகன் ராஜ், தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டினர். கை, கால்கள், முகத்தில் பலத்த வெட்டுகாயம் அடைந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மோகன் ராஜ் மாதப்பூர் பாஜக கிளைத் தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஓடி வருவதற்குள் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ஊர் மக்கள் வந்து பார்த்தபோது நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனை முன்பு திரண்ட
பாஜகவினரும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ஐஜி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. செந்தில் குமாரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த குட்டி (எ) வெங்கடேசன் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணப் பிரச்னை ஏற்பட்டதால் வெங்கடேசனை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.இதில் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
செந்தில் குமார் மீது ஆத்திரத்தில் இருந்த வெங்கடேசன், சில நபர்களுடன் சேர்ந்து வேண்டுமென்ற செந்தில் குமார் இடத்தில் அமர்ந்து மது அருந்தி பிரச்னை செய்துள்ளார். அதனை கண்டித்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். வெங்கடேசனை பிடித்துவைத்துள்ள போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது,இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் என்ற அறிவிப்பு வெளியானபோதே, இந்தக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க அறிமுகப்படுத்தப்போவதாக பேச்சுகள் எழுந்தன. அதற்கேற்றவாறு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியங்கள் தொடர்பாக ஆராயக் குழுவும் அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்தபோதும், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது தேர்தல் செலவுகள் உட்பட பல்வேறு வேலைகளைக் குறைக்கும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்றும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறிவருகின்றன.
மேலும், குழு அமைக்கப்பட்டது குறித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க இப்போதைக்கு குழு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு அறிக்கையைத் தயார் செய்ததும், அது பொதுத்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெறும். எனவே, இதில் விவாதங்கள் நடைபெறும் என்பதால், பதற்றப்பட வேண்டாம்” என்று நேற்று கூறினார்.
இந்த நிலையில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தக் குழுவில் ராம்நாத் கோவிந்த் உட்பட, எட்டுப் பேர் இடம்பெற்றிருக்கின்றனர். அதில் ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-ம் நிதிக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், சுபாஷ் காஷியப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் சென்னை திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்தில் சென்னை போலீஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் என்பவர், கிரிஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார. ஆனால் பல ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய மறுத்து வந்தார்.
வீட்டை காலி செய்து கொடுக்கக்கோரி கிரிஜா கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டும் திமுக வட்ட செயலாளர் ராமலிங்கத்தை காலி செய்ய உத்தரவிட்டது. இறுதியாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ராமலிங்கம் காலி செய்யவில்லை.
மனம் உடைந்த கிரிஜா மீண்டும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்த விவரங்களை கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறுகையில், “ராமலிங்கம் திமுக வட்டச் செயலாளராக உள்ளதால் மனுதாரரும், அவருடைய கணவரும் தங்களது வயோதிக வயதில் இந்தவீட்டை திரும்பப் பெற 13 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
ராமலிங்கத்துக்கு தி.நகர் தண்டபாணி தெருவில் சொந்த வீடு இருந்தும், தற்போதுள்ள வாடகை வீட்டை காலி செய்து கொடுக்க அவருக்கு மனமில்லை என மனுதாரர் தரப்பில் வாதிட்டிருக்கிறார்கள்.
சென்னை காவல் ஆணையர் 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வரும் செப்டம்பர் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய விவகாரங்கள் குறித்த விசாரணை சேலத்தை சுற்றியே இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கனகராஜ் கொடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்து வந்து சிலரிடம் கொடுத்தார். கொடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன். என்னை சந்தித்த போது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில் தான் 5 பைகளை எடுத்து வந்ததாக என் தம்பி கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் என்னிடம் அப்போது தெரிவித்தார். கொடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்து வந்ததால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்த போதுதான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார்.
கனகராஜ் இறந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் தனபால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் வைத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இது குறித்து தெரிய வரும் என்றும் கூறி அதிர வைத்தார்.
கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து மர்ம விபத்து மரணங்கள், தற்கொலை என அடுத்தடுத்து நடந்தன. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தனிப்படை போலீஸார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனிப்படை போலீஸார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தும் வருகிறார்கள்.
720 செல்போன் அழைப்புகளை தீவிரமாக விசாரிக்கும் நடவடிக்கையும் இறங்கி உள்ளனர்.
கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்
இந்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் திவிரப்படுத்தி உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
EPS-க்கும் திமுக-விற்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரை கொடநாடு வழக்கு வெறும் அரசியலாக பேசப்படுமே ஒழிய ஆக்கபூர்வமான விசாரணையோ அதன் முடிவுகளோ எட்டப்படுவது போல தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் CBI விசாரணை வேண்டும் என்று சொல்கிறார்.ஆனால் அவர் முதலமைச்சராக இருக்கும்பொழுதே இந்த வழக்கில் “என் தலைமையிலான காவல் துறை விசாரணை செய்தால் சரிவர விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு வரும்” என்று அப்பொழுதே CBI-யிடம் ஒப்படைத்திருக்கலாம்.
CBI நேர்மையாக விசாரிக்கும் என்று EPS நினைத்தால் “நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற ஊழல் வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்று தான் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் CBI விசாரணை வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உத்தரவும் பெற்றார்.
அமலாக்கத் துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோவுக்கும், அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கும் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை… செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். அப்போது அவரிடம் 150 பக்க குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.
ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், ஜாமீன் கோருவதற்கான வேலையை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் டீம் நேற்று முன்தினமே வேலையை துரிதமாக ஆரம்பித்தது..
நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார்.
நீதிபதி அல்லி, Let Me see (மனுவை பார்க்கிறேன்) என்று கூறினார்.. எனினும், இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் மனு பட்டியலிடப்படவில்லை.
நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம், சிறப்பு நீதிமன்றம்தான் இதுகுறித்து விசாரிக்க முடியும்.. எனவே அங்கே முறையிடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
நீதிபதி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பது சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.