தி நகர் திமுக வட்டச் செயலாளரை வெளியேற்ற 48 மணிநேரம் கெடு!


வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் சென்னை திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்தில் சென்னை போலீஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் என்பவர், கிரிஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார. ஆனால் பல ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய மறுத்து வந்தார்.

வீட்டை காலி செய்து கொடுக்கக்கோரி கிரிஜா கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டும் திமுக வட்ட செயலாளர் ராமலிங்கத்தை காலி செய்ய உத்தரவிட்டது. இறுதியாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ராமலிங்கம் காலி செய்யவில்லை.

மனம் உடைந்த கிரிஜா மீண்டும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்த விவரங்களை கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறுகையில், “ராமலிங்கம் திமுக வட்டச் செயலாளராக உள்ளதால் மனுதாரரும், அவருடைய கணவரும் தங்களது வயோதிக வயதில் இந்தவீட்டை திரும்பப் பெற 13 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

ராமலிங்கத்துக்கு தி.நகர் தண்டபாணி தெருவில் சொந்த வீடு இருந்தும், தற்போதுள்ள வாடகை வீட்டை காலி செய்து கொடுக்க அவருக்கு மனமில்லை என மனுதாரர் தரப்பில் வாதிட்டிருக்கிறார்கள்.

சென்னை காவல் ஆணையர் 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வரும் செப்டம்பர் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Share on:

சேலத்தை சுற்றி களம் இறங்கிய சிபிசிஐடி போலீஸ்.


கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய விவகாரங்கள் குறித்த விசாரணை சேலத்தை சுற்றியே இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கனகராஜ் கொடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்து வந்து சிலரிடம் கொடுத்தார். கொடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன். என்னை சந்தித்த போது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில் தான் 5 பைகளை எடுத்து வந்ததாக என் தம்பி கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் என்னிடம் அப்போது தெரிவித்தார். கொடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்து வந்ததால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்த போதுதான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார்.

கனகராஜ் இறந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் தனபால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் வைத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இது குறித்து தெரிய வரும் என்றும் கூறி அதிர வைத்தார்.

கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து மர்ம விபத்து மரணங்கள், தற்கொலை என அடுத்தடுத்து நடந்தன. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தனிப்படை போலீஸார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனிப்படை போலீஸார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

720 செல்போன் அழைப்புகளை தீவிரமாக விசாரிக்கும் நடவடிக்கையும் இறங்கி உள்ளனர்.

கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர் இந்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் திவிரப்படுத்தி உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
Share on:

முடிவை நோக்கி நகராமல் இன்று வரை வெறும் அரசியல் ஆக்கப்படுகிறதா கொடநாடு வழக்கு!


EPS-க்கும் திமுக-விற்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரை கொடநாடு வழக்கு வெறும் அரசியலாக பேசப்படுமே ஒழிய ஆக்கபூர்வமான விசாரணையோ அதன் முடிவுகளோ எட்டப்படுவது போல தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் CBI விசாரணை வேண்டும் என்று சொல்கிறார்.ஆனால் அவர் முதலமைச்சராக இருக்கும்பொழுதே இந்த வழக்கில் “என் தலைமையிலான காவல் துறை விசாரணை செய்தால் சரிவர விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு வரும்” என்று அப்பொழுதே CBI-யிடம் ஒப்படைத்திருக்கலாம்.

CBI நேர்மையாக விசாரிக்கும் என்று EPS நினைத்தால் “நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற ஊழல் வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்று தான் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் CBI விசாரணை வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உத்தரவும் பெற்றார்.
Share on:

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!


அமலாக்கத் துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோவுக்கும், அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கும் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை… செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். அப்போது அவரிடம் 150 பக்க குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.

ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், ஜாமீன் கோருவதற்கான வேலையை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் டீம் நேற்று முன்தினமே வேலையை துரிதமாக ஆரம்பித்தது..

நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார்.

நீதிபதி அல்லி, Let Me see (மனுவை பார்க்கிறேன்) என்று கூறினார்.. எனினும், இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் மனு பட்டியலிடப்படவில்லை.

நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம், சிறப்பு நீதிமன்றம்தான் இதுகுறித்து விசாரிக்க முடியும்.. எனவே அங்கே முறையிடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

நீதிபதி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பது சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.
Share on:

சந்திரயான் 3ன் எதிர்பாராத கண்டுபிடிப்பு!


நிலவின் தரைப்பரப்பு வெப்பநிலை வேறு வேறாக இருப்பதாக சமீபத்தில் சந்திரயான் 3 கண்டுபிடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி உள்ளது. பல்வேறு சோதனைகளை செய்ய நிலவில் சந்திரயான் 3 மூலம் பல்வேறு கருவிகள் களமிறக்கப்பட்டன.

அந்த கருவிகள் எல்லாமே தற்போது நிலவின் மேல்பகுதியில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதாவது ஆக்டிவ் ஸ்டேட்டஸுக்கு வந்துள்ளது

சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது.

விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (SPL), விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் (PRL) இணைந்து இந்த சோதனை கருவி உருவாக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை

இந்த ஆய்வு கிட்டத்தட்ட சந்திர மேற்பரப்பில் செருகப்பட்ட ஒரு வெப்பமானி போன்றது. மேல் மேற்பரப்பில் இருந்து கீழே செல்லும்போது நிலவின் மேற்பரப்பில் வெப்பம் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதே இஸ்ரோவின் கவனம். அங்கே தண்ணீர் நிலையை கண்டுபிடிக்க இது உதவும் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது

பிரக்யான் ரோவர் நிலவில் இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

ந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது. லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல். இது வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிலவின் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வது. இந்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல். நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
Share on:

ரோந்து பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள்!


சென்னை;

சென்னை கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 56). இவர் ஆர்.கே.நகர் போலீசில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மேம்பாலம் கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அழைத்து விசாரணை நடத்தியபோது, போதையில் இருந்த அந்த கும்பல் பாலமுருகனிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சுற்றிவளைத்து சப்-இன்ஸ்பெக்டரை பாலமுருகன் திடீரென கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டதில், மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நேரில் சந்தித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஆர்.கே.நகர் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை கைது செய்தனர்

மேலும் போலீசார் விசாரணையில், அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மாணவர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Share on:

மதுரை ரயிலில் எரிந்த ரூ 500 நோட்டு கட்டுகள்..


மதுரை ரயில் விபத்து சம்பவம் நடந்த போது தப்பியோடிய சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 17ஆம் தேதி புறப்பட்ட இந்த ரயிலில் பயணித்த இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்றுள்ளனர்.
மதுரையில் அதிகாலை 3.45 மணிக்கு இந்த ரயில் வந்தது. இவர்கள் சென்னை செல்வதற்காக இணைப்பு ரயிலில் அட்டாச் செய்ய மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் சுற்றுலா ரயிலை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அதிகாலை 4.30 மணிக்கு டீ போடுவதற்காக சிலிண்டரை ஆன் செய்து கேஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது சிலிண்டரில் இருந்த வாயு லீக்காகி தீப்பிடித்ததில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ரயிலில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் எப்படி ரயிலில் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

ரயில் பெட்டியில் இன்று மீண்டும் சோதனை செய்த போது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ரயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. தீவிபத்து நடந்த போது ரயிலில் இருந்த சுற்றுலா ஏற்பாடு செய்த 5 ஊழியர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அந்த ஊழியர்களை கண்டுபிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
Share on:

மதுரை ரயில் தீ விபத்து: ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்கள்


மதுரை ரயிலில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டின் கழிவறை முழுவதும் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 55 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க கடந்த 17 ஆம் தேதி புறப்பட்டுள்ளனர் புனலூர் அருகே வேறு ஒரு ரயிலில் இந்த பெட்டியை இணைப்பதாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென இநத பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் தீயில் கருகி இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட விசாரணையில் ரயிலில் சிலிண்டர் வெடித்ததே தீவிபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என்ற போது ஒன்றல்ல இரண்டல்ல 3 சிலிண்டர்களை எப்படி இவர்கள் எடுத்துச் சென்றார்கள் என தெரியவில்லை.

5.30 மணிக்கு டீ குடிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது இரு சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. அந்த பெட்டியில் பலர் அயர்ந்து தூங்கியதாலும் பெட்டியை பூட்டிவிட்டதாலும் வெளியேற முடியாமல் தீயில் கருகி 10 பேர் பலியாகிவிட்டனர்.

தீ விபத்தை அறிந்த சிலர் எப்படியோ காயங்களுடன் தப்பிவிட்டனர். புகையால் பலர் மூச்சுத்திணறிய நிலையில் தீயில் கருகி இறந்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க ரயிலில் சிலிண்டர் கொண்டு சென்றதே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்களை வைத்திருந்தனர். பெரிய பெரிய டபராக்கள், கரண்டிகள், தட்டுகள், பெரிய பெரிய அண்டாக்கள் என இருந்தன
Share on:

செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு..


சிறைக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தியபிறகு, மறுபடியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியிடம் தினமும் நடத்திய விசாரணையின் தகவல்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.. அவை ஸ்க்ரிப்ட்டாகவும் எழுதப்பட்டுள்ளது

கஸ்டடி விசாரணையில் செந்தில் பாலாஜி கூறியவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் டெல்லியில் நடந்து வருகின்றன… இதனை வைத்து ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்படுமாம்.

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

அதனடிப்படையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையிலிருந்து வீடியோ காணொலிகாட்சி மூலம் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Share on:

சந்திரயான் 3: நேரு முதல் சைக்கிளில் சுமந்து செல்லப்பட்ட ராக்கெட்


நிலவின் தென் துருவம் அருகே கால்பதித்துவிட்டது இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம். இதன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி படங்களை வெற்றிகரமாக அனுப்பியும் வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்க்கிறது.

இந்த சாதனைக்காக நமது தேசம் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என்பதற்காக இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆய்வு தொடர்பான சில பழைய சரித்திரப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.

இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கு வித்திட்ட நாட்டின் முதல் பிரதமர் நேரு, இந்திய விண்வெளித்துறையின் தந்தை விக்ரம் சாராபாய்

1960களில் இளம் விஞ்ஞானிகள் பரிசோதனை ராக்கெட்டை உருவாக்கும் முயற்சி

1960களில் இந்திய விண்வெளி துறையின் தந்தை விக்ரம் சாராபாய் மற்றும் இந்திய அணுசக்தி துறையின் தந்தை ஹோமி பாபா

1963-ல் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தம்பா ஆய்வு மையத்துக்கு சைக்கிளில் ராக்கெட்டை எடுத்து செல்லும் விஞ்ஞானிகள்

1963-ல் சைக்கிளில் கொண்டு செல்லப்படும் இந்திய ராக்கெட் நமது தேசம் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என்பதற்காக இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆய்வு தொடர்பான சில பழைய சரித்திரப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
Share on: