அசுர வேகத்தில் பரவும் டெங்கு.. தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேர் பாதிப்பு


தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 14 வரை 210 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை காலம் தொடங்கும் முன்பாகவே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து விட்டது. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறுவன் பலியான நிலையில் புதுச்சேரியில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி’ என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும். வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் , மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன

காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை முடிய உடைகளை அணிய வேண்டும்.

“மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் மரணம் அடைந்திருக்கிறார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, டெங்கு என்பது கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கூட மிகப் பெரிய அளவில் கட்டுக்குள்தான் இருந்து வருகிறது என்றார். இருப்பினும், நேற்று வரை டெங்கு பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 253 பேர். இந்த 253-ல், கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர் என்று கூறினார்.

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
Share on:

பணத்தை திருப்பி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!


சென்னையில் நடந்த ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரியை டிக்கெட் இருந்தும் சில குளறுபடிகளால் பார்க்க முடியாமல் வீடு திரும்பிய 400 பேருக்கு பணத்தை திருப்பி செலுத்தினார் இசைப்புயல். கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ஏ.ஆர். ரகுமான் இசைக் கச்சேரி நடத்துவதாக சொல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ACTC Events என்ற நிறுவனம் செய்தது.

அன்றைய தினம் சென்னையில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதே டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேறு ஒரு நாளில் இசைக் கச்சேரி நடத்தப்படும் என ரகுமான் அறிவித்திருந்தார்.

இந்த இசைக் கச்சேரியானது கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் ஆசை ஆசையாய் குடும்பத்தினருடன் சென்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது டிக்கெட் வைத்திருந்தும் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை,

சில்வர், கோல்டு, பிளாட்டினம், டயமன்ட் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைனில் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை அந்த நிறுவனம் விற்றதாக சொல்லப்படுகிறது. ரகுமானின் இசையை விட குழந்தைகளின் அழும் குரல் ஆங்காங்கே கேட்டது!

கூட்டத்தினர் வந்து கொண்டே இருந்ததால் பலர் கச்சேரியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், உயிர்தான் முக்கியம் என கருதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டனர்

அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் டிக்கெட்டை சோதிக்காமல் எந்த பிரிவு சொல்கிறார்களோ அந்த பிரிவு இருக்கைக்கு அனுப்பிவிட்டனர்.

இது போன்ற மோசமான இசைக்கச்சேரியை நடத்தவே கூடாது. ஏ.ஆர் ரகுமான் அந்த விழா ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமானோ இசைக் கச்சேரி வந்துவிட்டு பார்க்க முடியாமல் திரும்பியோர் தங்களது டிக்கெட்டுகளின் நகல்களை இணையதள முகவரிக்கு அனுப்பலாம். என்னுடைய குழுவினர் உங்களை தொடர்பு கொள்வார்கள் என தெரிவித்திருந்தார்

இசைக் கச்சேரி குளறுபடி தொடர்பாக ஏ.ஆர். ரகுமானுக்கு இதுவரை 4000 பேர் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அனைவருக்கும் பணம் திருப்பி செலுத்தப்படும் என ஏ.ஆர். ரகுமானின் உதவியாளர் செந்தில் வேலன் தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் ரகுமான் ஏன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும், விழாவை ஏற்பாடு செய்தவர் மீதுதானே தவறு, அவர்தானே பணத்தை திருப்பி தர வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்

கச்சேரியை பார்க்க முடியாமல் திரும்பியதாக 4000 பேர் ரகுமானுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அவர்களில் 400 பேருக்கு இதுவரை பணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share on:

மணல் குவாரிகளில் குடையும் ஈடி! திமுக அரசின் “பிக் பிரதர் நம்பர் 2” டார்கெட்?


அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள், அவருடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தவர்களின் இடங்கள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என்பதுடன் இந்த விவகாரம் முடியவில்லை.. ஆளும் திமுக அரசின் பெருங்கரம் ஒன்றை நோக்கியே இந்த ரெய்டுகள் நகரப் போகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

இந்த முறை மணல் குவாரிகளை இலக்கு வைத்து தமிழ்நாடு முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை.

மணல் குவாரிகளை மையமாக வைத்து..:: வேலூர், திருச்சி, நாமக்கல் என மணல் குவாரி சார்ந்த இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்து ஆட்டம் காட்டி வருகின்றனர். தலைமை செயலக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அமலாக்கத்துறையின் இந்த ரெய்டு போக்கானது செந்தில் பாலாஜி தொடர்புடையதாக தோன்றலாம். ஆனால் இவர்களது டார்கெட் திமுக அரசின் மிகப் பெரும் புள்ளி ஒருவரை நோக்கியதாக நகருவதையே காட்டுகிறது. திமுகவிலும் திமுக அரசிலும் ‘வலதுகரமாக’ இருக்கும் அந்த புள்ளிக்குதான் டார்கெட் பிக்ஸ் செய்திருக்கிறது போல அமலாக்கத்துறை என்கின்றனர்.
Share on:

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் யார்?


இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் யார்? காவல் துறையா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களா?

காவல்துறை ஆணையரின் தவறுகளை மறைப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலமாக மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டிருக்கிறது. பெருவாரியான மக்கள் ஒரு இடத்தில் திரளுகிறார்கள் என்றால் அதற்குரிய பாதுகாப்பு, போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உறுதிசெய்ய வேண்டியது காவல்துறையின் கடமையா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கடமையா? அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அழிக்கும்போதே காவல் துறை இவை அனைத்தும் பரிசீலித்து அனுமதி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?
Share on:

சென்னையில் 4 வயது சிறுவன் காய்ச்சலுக்கு பலி..


சென்னை மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அய்யனார் – சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்‌ஷன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6ஆம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்‌ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Share on:

சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு..


கடலூர் அருகே விருத்தாச்சலத்தில் சமூக ஆர்வலர் இளையராஜா என்பவர் மீது 6 பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் இளையராஜா. இவர் முன்னாள் எம்.எல்.ஏ தியாகராஜனின் மூன்றாவது மகன் ஆவார். இவர் திமுக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மாவட்ட பொருளாளர் ஆவார். விருத்தாச்சலத்தில் வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார்.வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக காரில் ஏறியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பலினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

முதுகுப்பகுதியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் கிழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இளையராஜாவை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி இளையராஜா கூறுகையில், மணவாளநல்லூர் கிராமத்தை ராஜசேகர் மகன்கள் ஆடலரசன், புகழேந்தி ஆகிய இருவர்தான் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக கூறினார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கடலூரில் சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

மக்கள் மனதில் ஆளுமைமிக்க இயக்கமாக அதிமுக உருவெடுக்க வேண்டும்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என்கிற சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் இந்துத்துவா,திராவிடம் பாஜக vs திமுக என்று அமைக்கப்படுகிறது. அதிமுகவிற்கு இது மிக மிக ஆபத்தானது.

திமுக,பாஜக இரண்டுமே திட்டமிட்டு தமிழக அரசியல் களத்தை இதேபோல் அமைக்கிறார்கள்.இந்த நேரத்தில் அதிமுக நாடாளுமன்ற வெற்றியையும் தமிழகத்தை ஆளுகின்ற வாய்ப்பையும் பெற தன் பலத்தையும் தனித்தன்மையையும் நிரூபிக்க வேண்டும்.

அமைதியாக திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாமல் கொடநாடு கொலை வழக்கில் மூழ்கி இருப்பது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல வலிமையாக களத்தில் மக்கள் மனதில் ஆளுமைமிக்க இயக்கமாக உருவெடுக்க வேண்டும். – கே.சி.பழனிசாமி
Share on:

படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி.. கொண்டாடும் நீலகிரி மக்கள்!


நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த ஜெயஸ்ரீதான் நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார்.

ஜெயஸ்ரீ பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் முடித்தார். இதன்பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் விமானியாக முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார்.

ஜெயஸ்ரீ கூறுகையில், “எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தார்கள்.

வழக்கமான வேலைகளைவிட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநல பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் விமானியாக தொடர முடியாது. பணியை இழக்க வேண்டிய நிலை வரும்.

விமானியாக வர விரும்புவோருக்கு மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்ப கால பள்ளி படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களும் முக்கிய காரணம் என்று கூறுவேன். எங்கள் சமுதாயத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”

தன்னம்பிக்கையும், கல்வியும், பெற்றோரின் அன்பான ஆதரவும் பெண்களுக்கு இருந்தால் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும் என்பதற்கு விமானி ஜெயஸ்ரீ மிகச்சிறந்த உதாரணமாவார்.
Share on:

கருகும் நெற்பயிர்கள்.. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா?


மேட்டூர் அணையின் நீர் வரத்து 6,428 கன அடியில் இருந்து 3,535 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருவதால் ஆற்று நீரை நம்பி பாசனம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போனது. ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது.

நடப்பாண்டு தமிழ்நாட்டிற்குத் தேவையான காவிரி தண்ணீரை போராடியே பெற வேண்டியுள்ளது.

கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆற்று நீரை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை சரிவடைந்து வரும் நிலையில் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும். எனவே குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகிவிடும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Share on:

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற திட்டமா?


டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு வரும் 9, 10 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அரிசியல் பிரபலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடாமல், பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷும் தனது எக்ஸ் பக்கத்தில் உண்மை என்று பதிவிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு இந்தியா என்று பெயர் உள்ளதாகவும், மாநிலங்களின் ஒன்றியம் என்பதும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பாரத குடியரசு என்று குறிப்பிட்டுள்ளதுடன், சுய விவரக்குறிப்பில் அசாமின் முதலமைச்சர், பாரத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆசிரியர் நாள் வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஆளுநர், தனது வாழ்த்தில் பாரதம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

வலிமை மற்றும் திறமை மிகு பாரதத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கியபங்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி கூட உள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயர் மாற்றத்துக்கான சட்ட முன்வடிவம் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
Share on: