எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா?-முன்னாள் அ.தி.மு.க எம்.பி கே.சி.பழனிசாமி கேள்வி

.தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவியாக இருந்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு கேள்விகளை எழுப்பியுள்ளது. ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே இனி செல்லும்’ என எடப்பாடியும் பன்னீரும் இணைந்து செய்த சட்டத்திருத்தத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப் பட்டார் சசிகலா. அதை எதிர்த்து, மெரினா தியானப்புரட்சிக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வுக்கு உயிர்நாடியாக இருந்த இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி அணி, பன்னீர் அணி இடையே ஒற்றுமை ஏற்பட்டதும், இருதரப்பும் இணைந்து பொதுக்குழுவை நடத்தினர். அதில், கட்சியின் விதியில் மாற்றம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளைக் கொண்டுவந்தனர். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாக அந்தத் தீர்மானத்தையும் சட்டத் திருத்தத்தையும் பரிசீலனையில் வைத்திருந்த தேர்தல் ஆணையம், சமீபத்தில் இதற்கு ஒப்பதல் வழங்கித் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்குத் தொடர உள்ளார் முன்னாள் அ.தி.மு.க எம்.பி கே.சி.பழனிசாமி.

சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட போதே வழக்கு தொடர்ந்தவர், முன்னாள் அ.தி.மு.க எம்.பி-யான கே.சி.பழனிசாமி. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு கட்சிப் பதவி பறிக்கப்பட்டுத் தனியாக செயல்படுகிறார். இப்போது, ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கூடாது… பொதுச்செயலாளர் பதவி மட்டும் போதும்’ என்று தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திவருகிறார். அவர் நம்மிடம், “தேர்தல் ஆணையத்துக்கு இவர்கள் அனுப்பிய அ.தி.மு.க சட்டவிதிகள் திருத்தத்தில் 1976-ம் ஆண்டு முதல் இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதையே தேர்தல் ஆணையமும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அப்படியென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பொதுச்செயலாளரே இல்லை என்று அர்த்தமாகிறது.

அ.தி.மு.க சட்டவிதி 20-ன்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர் களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். விதி 43 படி, பொதுச்செயலாளர் பதவி குறித்து எந்தத் திருத்தங்களையும் மேற்கொள்ள பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. எனவே, பொதுக்குழுவினால் மட்டும் பொதுச்செயலாளர் பதவியை நீக்க முடியாது, ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒப்புதல் அளித்தால்தான் திருத்தம் செய்யமுடியும். சசிகலா பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டபோது, ‘பொதுக்குழுவுக்குப் பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் இல்லை’ என்று பன்னீர் செல்வம் சொன்னார். இப்போது மட்டும் எப்படி அதிகாரம் வரும்?

தேர்தல் ஆணையத்தில் கடந்த ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து நான் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். அதற்கு என்னிடமும் சசிகலாவிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவசரப் பட்டு தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து தினகரன் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், பொதுச்செயலாளர் பதவி குறித்த விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருக்கும்போது, தேர்தல் ஆணையம் எதற்காக அவசரமாக அறிவிப்பு வெளியிட்டது என்று தெரியவில்லை’’ என்கிறார் கே.சி.பழனிசாமி.

Share on: