
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் 7 வெளிநாட்டு கை கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளதால் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரி ரெய்டு ஆக்டோபஸ் கரங்களாக நீண்டு வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.
முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவருடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள், புதுச்சேரியில் அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள், அங்கு பணியாற்றும் ஊழியர் வீடு என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.
ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து இரண்டு கருப்பு பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 2.45 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் இருந்து கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதே போல சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.