பாஜக கூட்டணியை அதிமுக உதறியது சரிதானா?


பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நல்ல  முடிவு .இந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு .ஒருவேளை உறுதியாக இல்லாமல் மீண்டும் பாஜக கூட்டணியை தேடி சென்றால் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் .அதை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.

பாஜகவை பொருத்தவரை அதிமுகவை தங்கள் பக்க, கொண்டு வர சகல அஸ்த்திரங்களையும் பயன்படுத்தும் .ஏக்நாத் ஷிண்டேக்களை உருவாக்குவார்கள் .அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தது போல அதிமுக தலைவர்கள்   பலரது வீடுகளில் ரெய்டு நடக்கும் .இதை தண்டி கட்சியை உடைக்க பார்ப்பார்கள்.தேர்தல் ஆணையத்தின் மூலம் நெருக்கடி கொடுப்பார்கள் .எனவே 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை அதிமுகவுக்கு சோதனை காலம்தான் .அதை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

2014ல் பாஜக தனித்து ஒரு அணியை உருவாக்கியது போல் இப்போது உருவாக்க முடியாது .அப்போது மோடி பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார் .எனவே அவர் மீது பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இல்லை .ஆனால் இப்போது அப்படி இல்லை .ஓ பி எஸ் ,தினகரன் ,சசிகலா மற்றும் பா ம க ஆகியோரை சேர்த்துக்கொண்டு சாதி கூட்டணி வேண்டுமானால் அமைக்கலாம் .மூன்றாவது அணியாக நோட்டாவுடன் போட்டி போடலாம் .தமிழகத்தை பொறுத்தவற்றி வின்னர் .ரன்னர் மட்டுமே வாக்குகளை வாங்குவார்கள் .மூன்றாவதாக ஒருவர் வாக்குகளை வாங்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.

OPS எப்போதுமே பாஜகவின் தீவிர விசுவாசிதான் .அவர் எந்த காலத்திலும் தனியாக கட்சி தொடங்கமாட்டார் .பாஜவுக்கு துணையாக இருப்பார் .ஒரு கட்டத்தில் பாஜகவில் சேர்ந்துவிடுவார் .அவரது எதிர்காலத்தை பாஜகதான் தீர்மானிக்கும் .அதேசமயம் பாஜவை எதிர்க்கும் துணிவு ஓ பி எஸ் ,தினகரன் ,சசிகலா ஆகியோரிடம் இல்லை.

மத்திய அரசு மாநில அரசு இரண்டையும் எதிர்த்து தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது .தேர்தல் காலத்தில் சகல ஆயுதங்களையும் அவர்கள் பிரயோகிப்பார்கள் .எனவே அதிமுகவில் பிரிந்திருப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் .ஓ பி எஸ் ,சசிகலா,தினகரனை நான் சொல்லவில்லை .என்னை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இழந்த வாக்குகள் மீண்டும் அதிமுகவை நோக்கி வரும் .அது மட்டுமல்ல .திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளும் அதிமுகவுக்கு விழும்.

கட்சி தொண்டர்களால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் .ஏனெனில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவில் இன்னொரு எம் ஜி ஆரோ .ஜெயலலிதாவோ இல்லை.பல கோணங்களில் பல வலிமையுள்ள தலைவர்கள் ஒன்றுகூடி பயணித்தால் ,முயற்சித்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் .எடப்பாடியால் அனைத்தையும் செய்ய முடியுமா என்றால் முடியாது .எனவே அனைத்து தரப்பின் பலத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்னுடைய நிலைப்பாடு – K.C.Palanisamy
Share on:

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு!விஷமிகள் செய்த வேலை!


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவிக்கப்பட்டது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டுச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பாஜக கூட்டணி அண்மையில் முறிந்துள்ளது. பேரறிஞர் அண்ணா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எம்ஜிஆர் சிலையில் போடப்பட்டிருந்த காவி துண்டை போலீசார் அகற்றினர். தொடர்ந்து காவல்துறையினர் காவி துண்டை போட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share on:

கோவில் நிலத்தை அபகரித்த பாஜக எம்.எல்.ஏ-க்கள்?


புதுச்சேரியில் கோவில் நிலத்தை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபணமானால், சம்பந்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை என அம்மாநில அரசுத் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது

புதுச்சேரியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்துக்கு போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டு உள்ளதாகவு, இது சம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி கோவில் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இரு பாஜக எம்.எல்.ஏக்கள் தரப்பிலும், தாங்கள் அப்பாவிகள் என்றும் எந்த குற்றத்திலும் தாங்கள் ஈடுபடவில்லை என்றும், குறிப்பிட்ட அந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என நிரூபித்தால் கோவில் நிர்வாகத்திடம் அதை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்கள்.

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, கோவில் சொத்து தனியாருக்கு விற்கப்பட்டதில் அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். குற்றம்சாட்டபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம், புதுச்சேரி அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை சுட்டிக்காட்டி, விசாரணையை தொடர உத்தரவு பிறப்பித்தார்.

பொது சொத்தான கோவில் சொத்தை, பாதுகாக்க வேண்டியது எம்.எல்.ஏக்களின் கடமையும் கூட என்பதால் உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 6வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Share on:

அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கிய பாஜக மாவட்ட தலைவர்..


சென்னையில் பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் தமிழ்நாட்டில் சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. மணல் குவாரி தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாக ரெய்டு நடைபெற்றது. சென்னையில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

மணல் குவாரி அதிபர்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டது. கணக்கில் வராத ரூபாய் 2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. ன்னை ஓஎம்ஆர் சாலை உள்பட தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களி; அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னையில் தென்சென்னை பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பணிபுரியும் ஜோதிமணி என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் பற்றிய தகவல் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே, தென்சென்னை மாவட்ட பாஜக தலைவர் காளிதாஸ் வீட்டிலும், பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி என்பவரின் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
Share on:

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது!


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடபபாடி பழனிசாமி தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துதான் ஆக வேண்டும்; அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர்

பாஜக கேட்கிற 20 தொகுதிகளைக் கொடுத்துவிட்டாலே பாதி பிரச்சனை முடிந்துவிடும்; அதனால் தேவை இல்லாமல் பாஜகவுடன் மோத வேண்டம; அப்படி மோதுவது என முடிவெடுத்துவிட்டால் அதிமுகவுக்குள் தேவை இல்லாத குழப்பங்கள் தானாக வரும்; அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என சில தலைவர்களும் பேசி இருக்கின்றனர். இத்தகைய பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

இந்தக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக தவிர இதர கட்சிகளுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும் அதிமுக முடிவு செய்தது
Share on:

பாஜக கூட்டணி முறிவு? அண்ணாமலைக்கு எதிராக 2-வது தீர்மானம்?


பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நாளை நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்மையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சித்திருந்தது பெரும் பிரச்சனையை உருவாக்கியது.

சென்னையில் ஜூன் 13-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அண்ணா குறித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை பதில் கொடுத்தார். இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; பாஜக ஒரு வேஸ்ட் லக்கேஸ்; பாஜகவால் நோட்டாவை கூட தாண்ட முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்லூர் ராஜூ ஒரு பேட்டி அளித்தார். மத்தியில் பிரதமராக மோடிக்கு அதிமுக ஆதரவு தருகிறது; தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜக ஆதரவு தராது என அண்ணாமலை மீண்டும் கொடி பிடித்தார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தனர் அதிமுக தலைவர்கள். ஆனால் அதிமுக தலைவர்களை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்பட்டது

சென்னையில் நாளை மீண்டும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். சென்னையில் நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்ளக் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலையை மாற்றினால்தான் பாஜகவுடன் கூட்டணி என்கிற வகையிலான நிபந்தனை தீர்மானம் நிறைவேற்றப்படவும் சாத்தியம் இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
Share on:

பாஜகவுடன் மோதல்: டெல்லிக்கு படையெடுத்த 5 அதிமுக ‘தலை’கள்!


சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் 5 தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த இந்த 5 தலைவர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கேசி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணியில் பெரும் பிரளயத்தை உருவாக்கிவிட்டது. அண்ணாமலைக்கு ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சிவி சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கும் அண்ணாமலை அசராமல் பதில் கொடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, பாஜக எங்கள் கூட்டணியிலேயே இல்லை என அறிவித்தது. அப்போதும் அண்ணாமலை பிடிகொடுக்காமல் பதிலடி தந்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் செல்லூர் ராஜூ மூலமாக, அதிமுக சமாதனம் செய்ய முயற்சித்தது. பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடி பழனிசாமி என்கிற முழக்கத்தை செல்லூர் ராஜூ முன்வைத்தார். அதெல்லாம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜக ஆதரிக்காது என அப்போது பதில் தந்தார் அண்ணாமலை.

இதனால் கடுப்பாகிப் போன அதிமுக டெல்லியிடம் பஞ்சாயத்து செய்ய முடிவெடுத்தது. இதனால் அதிமுகவின் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, சிவி சண்முகம் என ஐந்து தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்திப்பது இவர்களது திட்டம். ஆனால் அமித்ஷா, அதிமுக தலைவர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் ஜேபி நட்டாவை மட்டும் நேற்று இரவு அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.

அதிமுக தலைவர்களின் டெல்லி பயணத்தை கேசி பழனிசாமி தமது சமூக வலைதளப் பக்கங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் கேசி பழனிசாமி கூறியிருப்பதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் டில்லியில் முகாம்.அமித்ஷாவை சந்திக்க காத்திருக்கிறார்கள்.

அதிமுக என்பது தனித்துவம்வாய்ந்த ஆளுமைமிக்க தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. வீராவேசமாக கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு பின்னர் எடப்பாடியை முதல்வராக அறிவிக்கவேண்டுமென்று செல்லூர் ராஜு மூலமாக கோரிக்கை வைத்து அதற்கு அண்ணாமலை பாராளுமன்றத்திற்கு உங்களை பயன்படுத்திக்கொள்வோம்; சட்டமன்றத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் அறிவித்த பிறகு டெல்லிக்கு காவடி தூக்கும் நவீன தரகர்கள்.

இவர்கள் ஐவரும் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை மீண்டும் பாஜகவிடம் அடகுவைக்க காத்திருக்கிறார்கள். ஆனால் தன்மானமிக்க அதிமுக தொண்டர்கள் இதை ஏற்கமாட்டார்கள் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் படுதோல்வி அடையச்செய்வார்கள். இவ்வாறு கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Share on:

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!


மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் (Rajya Sabha) நிறைவேற்றப்பட்டது.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை (செப்.21) நிறைவேறியது.

மாநிலங்களவை சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் பெரும்பான்மை வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 215 வாக்குகள் பதிவாகி இருந்தன.

எதிராக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி எட்டாவது திருத்தம்) மசோதா 2023 மீதான விவாதத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்த மசோதா நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்றார்.

தொடர்ந்து, “இது அனைத்து அரசியல் கட்சிகளின் நேர்மறையான சிந்தனையையும் காட்டுகிறது, இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய ஆற்றலைக் கொடுக்கும்” என்றார்.

முன்னதாக மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக AIMIM லிருந்து இரண்டு வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மேக்வால் தாக்கல் செய்தார். அப்போது மசோதா மீதான விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை அடையாளம் காண வெளிப்படையான செயல்முறை கடைப்பிடிக்கப்படும் என உறுதியளித்தார்.
Share on:

அதிமுக பாஜக கூட்டணிக்குள் பிரச்சினையில்லை!


பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை என்றும் அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையே கடந்த ஓராண்டு காலமாகவே பிரச்சினை நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. அண்ணாமலை தலைவரானதில் இருந்தே தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார்.

அவ்வப்போது அண்ணாமலை பேசும் பேச்சுக்கள் அதிமுக பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தி விடும். அப்படித்தான் ஜெயலலிதா பற்றியும் அண்ணாவைப் பற்றியும் அண்ணாமலை கூறியது பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது என்று கூறினார் ஜெயக்குமார். கடந்த 2 நாட்களாகவே அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையை வசைபாடினர். எடப்பாடி பழனிச்சாமியோ எந்த கருத்தும் கூறாமல் அமைதி காத்து வந்தார். ஆனால் பாஜகவை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியானது.

எங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என்றும் மோடிதான் பிரதமர் என்றும் கூறினார் செல்லூர் ராஜூ. அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, மோடியை பிரதமராக ஏற்கிறது அதிமுக. பிறகு பிரச்சனை . தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக – பாஜக இடையே சித்தாந்தங்கள் வேறு வேறு எனும் போது சில முட்டல் , மோதல் இருக்கத்தான் செய்யும். பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை.அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன்.

மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதே இலக்கு. எந்த கட்சிக்கும் பாஜக போட்டி இல்லை. அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன். அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டது என்று ஜெயக்குமார் சொன்ன நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை
Share on:

மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ 2029-ல் தான் அமல்?


வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. “மகளிர் இடஒதுக்கீடு” பெருமை பாஜகவுக்குதான் சேரும் என அக்கட்சியினர் நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகின்றனர்- இது நடைமுறைக்கு வர இன்னும் 6 ஆண்டுகள் ஆகும் மாநிலங்களின் சட்டசபை, நாடாளுமன்றம் இரண்டிலும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்து வலியுறுத்தப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் முதலில் 33% எனவும் பின்னர் 50% ஆகவும் உயர்த்தியது மகாராஷ்டிரா. இதன் பின்னர் நாடு தழுவிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அமல்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இம்மசோதாவை ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.

புதிய கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடியின் அறிமுக உரையில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இம்மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்தே நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, திருத்தங்களுக்காக மீண்டும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டாலும் அடிப்படையில் இது 2029-ம் ஆண்டளவில்தான் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஏனெனில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னர்தான் மகளிர் இடஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வரும் என்கிறது மத்திய பாஜக அரசின் மசோதா.

2026/2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதுதான் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலாகும்.

தற்போதைய மத்திய அரசின் 33% இடஒதுக்கீடு மசோதா, எஸ்சி- எஸ்டி- தலித்/பழங்குடி பெண்களுக்கான உள் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. எங்கள் கிராமத்து பெண்களின் (ஓபிசி) பிரதிநிதிகளாக எப்படி உயர்ஜாதி பெண்களைப் பார்க்க முடியும்? ஆகையால் ஓபிசி பெண்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு அவசியம் என்ற சமாஜ்வாதி, ஆர்ஜேடி ஆகியவற்றின் குரல் எடுபடாமல் இருக்கிறது. அத்துடன் தற்போதைய மசோதா ஒரு தெளிவானதாக இல்லாமல் மேம்போக்கானதாக இருக்கிறது.. இது நடைமுறைக்கு வரக் கூடியதான ஒரு மசோதாவா? என்கிற சந்தேகத்தையும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.
Share on: